Saturday, May 15, 2010

8. யுத்த காண்டம் - 3ஆம் பாகம்.

                                                                                              உரை நடை வடிவம்:
                                                                          
கம்பர் இயற்றிய இராம காதை
யுத்த காண்டம் - 3ஆம் பாகம்.

யுத்த காண்டத்தின் முந்தைய பகுதியின் இறுதியில் கும்பகர்ணனுடைய வீர சாகசச் செயல்களையும், இராகவனது வாளி அவன் தலையைக் கொண்டு போய் கடலில் போட்ட வரலாற்றையும் பார்த்தோம். இனி இலங்கை மன்னன் இராவணன் சீதைபால் வைத்த பொருந்தாக் காமத்தால், தனது சிறுமைகளிலிருந்து விடுபடாதவனாக, மேலும் மேலும் தவறான வழிகளையே மேற்கொள்கிறான் எனும் வரலாற்றைப் பார்க்கலாம்.

இராவணன் தனது அமைச்சனான மகோதரனிடம் சீதையை நான் எப்படியும் அடைவதற்கு ஒரு நல்ல உபாயம் சொல் என்று கேட்கிறான். "சொல்கிறேன்" என்று மகோதரன் ஓர் சூழ்ச்சியைக் கூறுகிறான். "மருத்தன் என்றொரு அரக்கன், மாயையும், வஞ்சனையும் உடையவன். அவனை ஜனக மன்னன் போல உருவத்தை எடுத்துக் கொண்டு, சீதையிடம் கொண்டு செல்வோம். தன் தந்தை துன்பப் படுவதைச் சகித்துக் கொள்ள முடியாமல், அவள் உன்னை ஏற்றுக் கொள்வாள்" என்றான் மாயையில் வல்ல மகோதரன். இப்படியொரு ஆலோசனை வழங்கிய மகோதரனை, இராவணன் மார்போடு தழுவிக் கொண்டு, "அவனை இங்கே கொணர்ந்து அவ்விதமே செய்" என்றான்.

தீய எண்ணங்களோடு இராவணன் அசோகவனத்தை அடைகிறான். அங்கே சீதையிடம் தான் காமவசப்பட்டு தளர்வுறும் நிலையை எடுத்துரைத்துத் தன்னை ஆதரித்து அருளும்படி நிலத்தில் விழுந்து மன்றாடிக் கேட்கிறான். இந்த அரக்கனது செயலைக் கண்டு ஜானகி அச்சமுற்றாள். தூர்த்தனாகிய இராவணனை ஏறிட்டும் பார்க்கவில்லை. கீழே கிடந்ததொரு துரும்பை எடுத்தாள், அதை கீழே போட்டு அதனை இராவணனாக எண்ணிக்கொண்டு, தன் ஆருயிர் நாயகனாகிய இராமனையன்றி வேறு எவரையும் எண்ணாத தன் உள்ளத்து உறுதியை அறிவுறுத்துகிறாள். தீயோன் இராவணனைப் பார்க்கவும் விரும்பாமல் வேறு புறம் திரும்பிக் கொள்கிறாள். இராவணனுக்குத் தாங்க முடியாத அவமானம், கோபம். சீதையிடம் "நின் கணவனாகிய இராமனைக் கொல்வேன். அவனது சுற்றத்தார் அனைவரையும் அயோத்தியிலும், மிதிலையிலும் கொல்வேன். அவர்களைக் கொண்டு வர ஆற்றல் மிக்க அரக்கர்கள் சென்றிருக்கிறார்கள்" என்றான்.

வஞ்சனை மிக்க அவன் சொற்கேட்டு பெரும் துயரமடைந்தாள் சீதை. அந்த நேரம் மகோதரன் ஜனகன் வேடமிட்ட அரக்கனை, அவள் முன் கொண்டு வந்து நிறுத்துகிறான். தனது தந்தை அரக்கர்களிடம் சிறைப்பட்டுக் கிடப்பதைக் கண்டு ஜானகி பலவும் சொல்லி அரற்றுகிறாள். மாயா ஜனகன் இராவணனை வணங்குவதைக் கண்டு பறவைக் குஞ்சைப் போல பதறுகிறாள். ஜனகனாக வேடமிட்டவன் பொய்யானவன் என்பதை ஜானகி உணரவில்லை. தன் தந்தையின் துன்பத்தைப் போக்க வழி தெரியாதவளாய்த் தவிக்கிறாள்.

வலிமையற்ற பெண்ணான எனக்குத்தான் துயரம் என்றால், வேந்தனாகிய உனக்கும் இப்படி பகைவனை வணங்கிடும் இழிநிலை வந்ததே என்று வருந்தினாள். என் தந்தையையே பற்றிக் கொணர்ந்த இவர்களுக்கு, தவ நிலையில் இருக்கும் பரதனைப் பிடித்துக் கொண்டு வருதல் எளிதானதுதானே, அரியது அல்லவே! இப்படி வருந்தித் துயரத்தில் உழன்ற சீதையிடம் இராவணன் அவைளைத் தன் விருப்பத்திற்கு இசையுமாறு வேண்டுகிறான். வெகுண்டெழுந்த சீதை, "தூர்த்தனே! என் நாயகன் அம்பிற்கு நீயும் உன் சுற்றமும் அழியப்போவது திண்ணம்" என்றாள்.

"நீ இராமனின் அம்பு பாய்ந்து போர்க்களத்தில் வீழ்ந்து கிடப்பாய். காக்கைகள் உன் கண்களைத் தன் அலகினால் கொத்தித் தின்னும். புலால் தின்ற பேய் வாய்கள் உன்னைச் சுற்றி ஆடும். போரிலே உன் மகனை இலக்குவன் கொல்வான்; அவன் உடம்பை பிணம் உண்ணும் நாய்கள் தின்னும்; நீ இறந்த மகனை எண்ணி வாய்விட்டு அலறப் போகிறாய்!" இப்படி பிராட்டி சொன்னதும், வெகுண்டெழுந்த இராவணன், கைகளைப் பிசைந்து கொண்டு, பற்களைக் கடித்து, வாயை மடித்து, சீதையை நோக்கி விரைவாக வந்தான்; அப்படி வந்தவனை மகோதரன் தடுத்தான்.

"இவளை நீ ஒன்றும் செய்ய வேண்டாம். இவள் தந்தை ஜனகன் சொன்னால், இவள் கேட்பாள்" என்றான். கோபம் தணிந்து இராவணன் திரும்பி வந்தான். அப்போது ஜனகன் வேடமிட்ட மாய அரக்கன் சீதையிடம், "தந்தை உன் முன்னால் இறக்கும்படி நீ பார்த்துக் கொண்டிருக்கப் போகிறாயோ? உன்னால், பிற உயிர்கள் அழிவது நல்ல செயலோ? நீ இலங்கை வேந்தர்க்கு உடன்பட்டு அவனை ஏற்றுக் கொள்வது உனக்கு ஒரு தீங்காகுமோ?" என்றான்.

மாயா ஜனகனின் சொற்களைக் கேட்ட சீதை அடைந்த நிலையை என்னவென்று சொல்வது?

"அவ்வுரை கேட்ட நங்கை, செவிகளை அமையப் பொத்தி
வெவ்வுயிர்த்து, ஆவிதள்ளி, வீங்கினள் வெகுளி பொங்க
'இவ்வுரை எந்தை கூறான், இன் உயிர் வாழ்க்கை பேணி
செவ்வுரை அன்று இது' என்னாச் சீறினாள், உளையச் செப்பும்".

என் தந்தை இப்படிப்பட்ட பேச்சை பேசவே மாட்டார். பழியை ஏற்றுக் கொண்டு எப்படியாவது உயிர் வாழ வேண்டுமென்று என் தந்தை எண்ணவே மாட்டார். இவ்வார்த்தைகள் அறமும் அன்று, நேர்மையும் அன்று, என்று மனம் நைந்து வருந்தினாள்.

"அறம் உணர்ந்தவர் சொல்லும் சொல்லா இது? நற்குடிப் பிறந்தார் கூறும் செயலா இது? வேத நூல் கற்றவர் கூறும் நெறியா இது? உயிரினும் மேலாக பண்பு பாராட்டுவோர் நினைக்கக் கூடிய செயலா இது? நீ நற்குடி பிறந்த ஜனகன் அல்ல! நீ என் தந்தையே அல்ல!" என்று அலறினாள் சீதை.

"என் ஆருயிர் நாயகன் இராமபிரான் அன்றி வேறு ஆடவர் எவரேனும் என்னை அணையும் கருத்துடன் என்னருகில் நெருங்க முயல்வானாயின், அவர்கள் தீச்சுடரை அணுகிய விட்டிற் பூச்சியைப் போல அழிவார்கள். நிலத்தின் இயல்பை விளையும் பயிர் காட்டுவது போல, ஒருவரது குலத்தின் இயல்பை, அவர் கூறும் வாய்ச் சொற்கள் புலப்படுத்தும்." என்கிறாள் சீதை.

அப்போது அந்த மாயா ஜனகனைக் கொன்று விடுவதாகக் கூறிக்கொண்டு இராவணன் தனது வாளை உறுவுகிறான்.

"உன்னால் ஒருவரையும் கொல்லுதல் இயலாது. நீ இராமபிரான் அம்பினால் இறந்தொழிவாய்!" என்றாள் சீதை.

மகோதரன் இராவணனை சமாதானம் செய்வது போல பாசாங்கு செய்து, அந்த மாயா ஜனகனைக் கொல்லாமல் தடுத்து அழைத்துச் செல்கிறான். அப்போது போர்க்களத்திலிருந்து பெருத்த ஆரவாரம் கேட்கிறது. இராவணன் காதிலும் அந்த ஆரவாரம் வந்து விழுகிறது.

தூதர்கள் வந்து இராவணன் காதோடு, "உம்பி இறந்தனன், இராமன் கொன்றனன்" என்றனர். போர்க்களத்தில் தம்பி கும்பகர்ணன் இறந்த செய்தி கேட்ட இராவணன் பெரும் துயரத்தில் ஆழ்ந்தான். தாங்க முடியாத துயரத்தால் உணர்வு இழந்தான். உணர்வு திரும்பியபின் விழித்தெழுந்து, வாய்விட்டு கதறி அழுதான், மாண்டுபோன தன் அருமைத் தம்பி கும்பகர்ணனுக்காக.

"தம்பியோ! வானவர் ஆம் தாமரையின் காடு உழக்கும்
தும்பியோ! நான்முகத்தோன் சேய் மதலை தோன்றாலோ!
தம்பியோ! இந்திரனை நாமப் பொறி துடைத்த
எம்பியோ! யான் உன்னை இவ் உரையும் கேட்டேனோ!"

தேவர்களுடைய தாமரைத் தடாகத்தைத் துவைத்து துவம்சம் செய்த யானை போன்ற தம்பியே! பிரமனின் மகன் வயிற்றுப் பேரனே! ஆண்களில் சிறந்தவனே! இந்திரனை வென்ற என் அருமைத் தம்பியே! நான் இருந்து, உன் இறந்த செய்தியைக் கேட்கும்படியாக நேர்ந்ததே!".

"தன்னைத்தான், தம்பியைத்தான், தானைத் தலைவனைத்தான்
மன்னைத்தான், மைந்தனைத்தான், மாருதத்தின் காதலைத்தான்
பின்னைக் கரடிக்கு இறையைத்தான் பேர் மாய்த்தாய்
என்னத்தான் கேட்டிலேன்; என் ஆனவாறு இதுவே".

என் பொருட்டுப் போர்க்களத்தில் ஆவி துறந்த என் அருமைத் தம்பி! அந்த வில்வீரன் இராமனையோ, அல்லது அவன் தம்பியாகிய இலக்குவனையோ, அல்லது படைத்தலைவன் நீலனையோ, அல்லது வானர மன்னன் சுக்ரீவனையோ, அல்லது வாலி மைந்தன் அங்கதனையோ, அல்லது வாயுபுத்திரன் அனுமனையோ, அல்லது கரடிகளுக்கு அரசன் ஜாம்பவானையோ, கொன்று ஒழித்தாய் என்று உலகத்தார் சொல்லக் கேட்டு மகிழவேண்டிய நான் இன்று உனக்கே மரணம் வந்தது என்று கேட்கும்படி நேர்ந்து விட்டதே!.

"காதல் மகளிர் உன் கால்களைத் தடவிவிட, தென்றல் வீசும் மாளிகையில் மலர்ப்படுக்கையில் துயிலுகின்ற நீ! போர்க்களத்தில், பேய்க் கணங்கள் கூத்தாட, பறை முழக்கம் கேட்கும்படி மண் தரையில் விழுந்து துயின்றாயோ?" இப்படி இராவனன் வாய்விட்டு அரற்றி அழுதான். தம்பி கும்பகர்ணன் மாண்டுபோன செய்தி அவனை பெரிதும் உலுக்கிவிட்டது. முன்பு இராவணன் எனும் பெயர் இவனுக்குக் கிடைக்கவும் இப்படியொரு முறை அழுததால்தான் கிடைத்தது. அது கைலை மலையை பெயர்க்கும் போது மலைக்கடியில் மாட்டிக் கொண்டு அழுத இராவணனுக்கு இரங்கி சிவபெருமான் கொடுத்த காரணப் பெயர். இராவணம் என்ற சொல்லுக்கு அழுகை என்று பொருள் உண்டு. அதோடு முக்கோடி வாழ்நாளையும், மாற்றாரை வெற்றி கொள்ளக்கூடிய 'சந்திரஹாசம்' எனும் வாளையும் சிவபெருமான் இராவணனுக்குக் கொடுத்தார் என்பது வரலாறு.

கும்பகர்ணன் போரில் மாண்டான் என்ற செய்தியும், அந்தச் செய்தியைக் கேட்ட இராவணன் அழுது புலம்புவதையும் கேட்ட சீதை மகிழ்ச்சியடைந்தாள். இராவனனுக்குத் தன் தம்பியைக் கொன்ற மானுட வர்க்கத்தையே பூண்டோடு ஒழிக்க வேண்டுமென்ற வெறி ஏற்பட்டது. அமைச்சர்கள் அவனைத் தேற்றி அழைத்துச் சென்றார்கள். போகிற போக்கில், இந்த (மாயா) ஜனகனைச் சிறையில் அடையுங்கள் என்றும் சொல்லிவிட்டுப் போனான்.

இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த திரிசடை சீதையிடம் உன் தந்தை என்று ஒருவனை அழைத்து வந்து இராவணன் நாடகம் ஆடினானே, அவன் உன் தந்தை அல்ல. கொடும் தொழில் பூண்ட மாயத்தில் வல்ல அரக்கன். அவன் பெயர் மருத்தன் என்றாள். சீதை நிம்மதி அடைந்தாள்.

அசோகவனத்திலிருந்த இராவணனுக்கு அவன் தம்பி கும்பகர்ணனின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்டதும், அவன் தாங்க முடியாத கோபம் கொண்டான் என்பதைப் பார்த்தோம். அவன் அரண்மனை திரும்பும் வழியில் இரு புறங்களிலும் நின்று வணங்குகின்ற அமைச்சர்கள் மீது கடும் கோபத்துடன் காணப்பட்டான்.

"பகைவர்களை அழித்து வெற்றியுடன் திரும்புவோம் என்று வீண் வீரம் பேசிவிட்டுப் போர்க்களம் போனீர்களே! தம்பிக்குத் துணையாக இருந்து அவன் உயிரைக் காக்கவும் இல்லை, போரில் வெல்லவுமில்லை. என் தம்பியைக் களபலி கொடுத்துவிட்டு வந்துள்ள நீங்கள் என் கண்முன் நிற்காதீர்கள், போய்விடுங்கள்!. போரில் வெற்றி பெற முடிந்தால் போருக்குச் செல்லுங்கள், இல்லை, பகைவனிடம் அடிபட்டு சாவோம் என்றால், போருக்கே போக வேண்டாம். இரண்டில் ஒன்றை மேற்கொள்ளுங்கள்!" என்று எரிந்து விழுந்தான் இராவணன்.

அதனைக் கேட்ட இராவணனது மகன் அதிகாயன், தன் உள்ளத்தில் பொங்கி வந்த கோபத்தில் இராவணனிடம், "தந்தையே! உன் தம்பியைக் கொன்றவனது தம்பியை, நான் கொன்று வருவேன். நீ பெற்ற துயரத்தை, அவனையும் அடைய வைப்பேன். நான் அப்படிச் செய்யத் தவறினால், உன் மகன் எனச் சொல்லத்தக்கவன் அல்லேன்" என்று சூளுரைத்தான்.

"தந்தையே! சேனையை அழைத்துக் கொண்டு போ என்று சொன்னாலும், அன்றி தனியாகவே போருக்குப் போ என்று சொல்லிப் பணித்தாலும், உன் எண்ணப்படி செய்வேன், விடை தருக!" என்றான்.

மகன் அதிகாயன் சொன்னதைக் கேட்டு இராவணன் பெருஞ்சேனையுடன், அவனை போருக்கு அனுப்பி வைத்தான். மேலும் சிறந்த வீரர்களான, கும்பன் எனும் கொடுந்தன்மையானும், நிகும்பன், அகம்பன் ஆகியோரையும் மகனுடைய தேருக்கு முன்பாகவும், பின்பாகவும் செல்லும்படி ஆணையிட்டு அனுப்புகிறான். ஆயிரம் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறி அதிகாயன் போருக்குச் செல்கிறான். அவனோடு கோடி யானைப் படையும், அதே அளவு குதிரைப் படையும் சென்றன. அதிகாயன் கவசத்தை அணிந்து கொண்டு, கையில் வில்லையும், உடை வாளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

போர்க்களம் சென்ற அதிகாயன் அங்கு இராமனால் அரக்கர் சேனைக்கு ஏற்பட்ட அழிவுகளைப் பார்த்தான். சித்தப்பா கும்பகர்ணனின் தலையற்ற முண்டம் கிடப்பதையும் கண்டு மனம் பதைத்தான். இந்த அவலத்தைக் காணவோ, நான் இங்கு வந்தேன் என்று அழுது புலம்புகிறான், கும்பகர்ணனின் தலையற்ற உடலைக் கண்டதும் கடும் கோபமடைகிறான். இதனைச் செய்த இலக்குவனைப் போரில் கொன்று, அவன் மறைவால் இராமன் படும் துயரைக் கண்ட பிறகுதான் என் துயரம் ஆறும் என்றான்.

இலக்குவனைத் தன்னுடன் போர் புரிய வருமாறு மயிடன் எனும் அரக்கன் மூலம் சொல்லி அனுப்புகிறான். மயிடன் இராமனைப் பார்க்கப் போன இடத்தைல், வானரர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்க, இராமன் அவர்களைத் தடுத்து, தூது வந்தவனைத் தாக்காதீர்கள் என்று அவனைக் காத்தான். மயிடனிடம் அவன் வந்த காரணம் யாது என்று இராமன் கேட்டதற்கு, அவன் அதை இலக்குவனிடம் மட்டும்தான் சொல்வேன் என்றான்.

"சரி! சொல்! சொல்!" என்று இலக்குவன் வேகமாகக் கேட்டான். மயிடன் இலக்குவனிடம் "பொன் மேனியனே, அதிகாயனுக்கு உன்மீது தான் ஆத்திரம். உன் மீது வெகுண்டவனாகி உன்னிடன் தனித்து நேருக்கு நேர் போரிட அழைக்கிறான். ஆற்றல் உண்டு என்றால், இப்போதே என்னுடன் புறப்படு" என்றான்.

இதனைக் கேட்ட இராமபிரான், "இலக்குவன் ஒருவனே அதிகாயனைத் தனித்து நின்று போரிட்டு அழிப்பான்" என்று அனைவரிடமும் கூறி, இலக்குவனை அனுப்பி வைக்கிறான். உடனிருந்த விபீஷணன், இராமனைப் பணிந்து, "முற்காலத்தில் திருமாலுடன் பொறாது இறந்த மது, கைடபன் எனும் அவுணர் இருவருமே முறையே கும்பகர்ணனாகவும், அதிகாயனாகவும் பிறந்துள்ளனர். அவர்களுள் மதுவாகிய கும்பகர்ணனை கொன்றாகிவிட்டது. கைடபனாகிய அதிகாயன் பிரமதேவனிடம் தவம் செய்து, அமரர்கள் முதலான எவராலும் அழிக்கமுடியாத பெரு வரத்தைப் பெற்றவன். அறவழிப்பட்டு போர் செய்வான். ஆகையால், இலக்குவரோடு நாம் அனைவருமே உடன் செல்வது நல்லது" என்றான்.

இராமன், இலக்குவனது ஆற்றலை விபீஷணனுக்கு எடுத்துரைத்தார். இலக்குவன் அதிகாயனின் தலையைக் கொய்து எடுப்பதை நீ பார்க்கப் போகிறாய். நீயும் அவனுடன் போ என்று அனுப்பிவைத்தான். இலக்குவன் இராமனைத் தொழுது, விபீஷணன் பின் தொடர அதிகாயன் இருக்குமிடம் சென்றான். அரக்கர் சேனையும் வானர சேனையும் கோபாவேசத்தோடு மோதிக் கொண்டன. அரக்கர்களுடைய தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாத வானரப் படை தளர்ச்சியடைந்தது.

இலக்குவன் அவர்களை "அஞ்சாதீர்கள்!" என்று தேற்றி, தன் வில்லின் நாணை இழுத்து அம்புகளைச் செலுத்தலானான். அரக்கர்கள் அழிந்து வீழ்ந்தனர். இதனைக் கண்ட தாருகன் எனும் அரக்கன் தேர் மீது அமர்ந்து இலக்குவன் மீது அம்புகளை எய்தான். இலக்குவன் அந்தத் தாருகனின் தலையைத் துண்டித்து வீழ்த்தினான். தாருகன் இறந்தது அறிந்து காலன், குலிசன், காலசங்கன், மாலி, மருத்தன் எனும் அரக்கர் ஐவரும் சூலம், கணிச்சி, பிண்டிபாலம், பாசம், அயில் ஆகிய ஆயுதங்களைக் கொண்டு இலக்குவனைத் தாக்கத் தொடங்கினார்கள். அவற்றையெல்லாம் தன் அம்பினால் அழித்தான் இலக்குவன். அந்த ஐவரின் தலைகளையும் கொய்து அவர்களது படைகளையும் கொன்று குவித்தான்.

அப்போது அதிகாயனுடைய யானைப்படை வானர சேனையை த்வம்சம் செய்து கொண்டு வந்தது. இதைக் கண்ட இலக்குவன் சரங்களைத் தொடுத்து அந்த யானைகளைக் கொன்று, அரக்கர்களையும் அழித்தான். அந்த நிலையில் இராவணன் அனுப்பிய ஒரு கோடி யானைகள் இலக்குவனைத் தாக்க முயன்றன. இளம் சிங்கம் போன்ற இலக்குவன் எய்த அம்புகள் அந்த யானைகள் அனைத்தையும் கொன்று போட்டன. போர்க்களம் முழுவதும், மலைகளைப் போல யானைகள் இறந்து கிடந்தன. குருதி வெள்ளம் ஆற்று வெள்ளம் போல ஓடியது.

யானைகள் மிகுதியாக வருவதைக் கண்ட அனுமன் கையில் தண்டு எடுத்து, யானைகளை நையப் புடைத்தும், காலால் மிதித்தும், வாளால் வளைத்து இறுக்கியும், கரத்தால் பறித்தும், கடலில் எறிந்தும், தரையில் தேய்த்தும் நூறாயிரம் யானைகளைக் கொன்றான். அனுமன் கொன்றவை போக மிகுதியை இலக்குவன் தனது அம்புகளால் நொடியில் கொன்று தீர்த்தான்.

இதனைக் கண்டு கடும் சினமடைந்து தேவாந்தகன் எனும் அரக்கன் அனுமனைத் தாக்க ஓடி வந்தான். அனுமன் விட்ட ஓர் அறையில் அந்த அரக்கன் சிவலோகப் பிராப்தியடைந்தான். அதிகாயன் அதிகமான கோபத்துடன் 'உன்னைக் கொல்லாமல் விடேன்' என்று அனுமனிடம் சொல்ல, அதற்கு அனுமன், 'உன்னுடன் திரிசிரனையும் அழைத்து வா என்றான். அருகில் நின்று கொண்டிருந்த அந்த அரக்கன் அனுமனை எதிர்த்துப் போரிட வந்தான். அப்போது அனுமன் அவனது தேர்மீது குதித்து அவனைக் கையால் பற்றி, தரையில் தள்ளி, அரைத்துக் கொன்றான். அப்போது மேற்கு வாயிலில் போர் மும்முரமாகவே, அந்த இடத்திற்கு அனுமன் விரைந்தான்.

அனுமனது போர் வன்மையைக் கண்டு அதிகாயன் அதிசயித்தான். இலக்குவனுடன் போர் செய்யக் கருதி அல்லவா போர்க்களம் வந்தேன் என்று எண்ணிக்கொண்டு, இலக்குவன் உள்ள பகுதிக்குத் தன் தேரைச் செலுத்தினான். இலக்குவனும் அதிகாயனுடன் போர் செய்யத் தயாரானான். அப்போது அங்கதன் இலக்குவனை அணுகி, அதிகாயன் தேர்மீது இருந்து போரிடுவதால், இலக்குவன் தன் தோள்மீது ஏறிக்கொண்டு போரிடும்படி கேட்டுக் கொள்கிறான். இலக்குவனும் அவ்வண்ணமே அவன் தோள் மீது ஏறி அதிகாயனுடன் போர் புரிந்தான்.

இலக்குவனுக்கும் அதிகாயனுக்கும் நேருக்கு நேராக நின்று கடும் போர் நடந்தது. அப்போது வாயுதேவன் இலக்குவன் அருகில் வந்து, 'இந்த அதிகாயன் பிரம்மாஸ்திரம் ஒன்றினால்தான் மரணம் அடைவான்', வேறு எந்த ஆயுதத்தாலும் அவனை அழிக்கமுடியாது என்று கூற, இலக்குவனும் அதிகாயன் மேல் பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அந்த அஸ்திரம் அதிகாயனது தலையைத் துண்டித்து எடுத்துக் கொண்டு வானவெளி வழியாகச் சென்றது. தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அச்சம் நீங்கியவராய் மலர் மழை பொழிகின்றனர். வெற்றி வீரனான இலக்குவன் அங்கதனுடைய தோளில் இருந்து கீழே குதித்தான்.

இலக்குவனது ஆற்றலைக் கண்ட விபீஷணன், 'இவனால் இந்திரஜித் அழிவது உறுதி' என்று உணர்ந்து கொண்டான். தன் அண்ணன் அதிகாயன் இறந்த செய்தி கேட்டு நராந்தகன் வெகுண்டு, இலக்குவனோடு போர் செய்தான். அதைக் கண்ட அங்கதன், அவன் கையில் இருந்த வாளைப் பிடுங்கி அதனாலெயே நராந்தகனை வெட்டிக் கொன்றான். பிறகு போர்மத்தன் எனும் அரக்கன் நீலனோடு போரிட்டு இறந்து போகிறான். வயமந்தன் எனும் அரக்கனை இடபன் எனும் வானர வீரன் கொல்கிறான். கும்பன் எனும் அரக்கனோடு சுக்ரீவன் போரிட்டு அவன் நாக்கைப் பிடுங்கி இழுத்துக் கொன்றான். நிகும்பன் எனும் அரக்கன் அங்கதன் மீது சூலப்படையை ஏவியபோது, அனுமன் அங்கே வந்து நிகும்பனைத் தன் கையால் அறைந்து கொன்றான். மற்ற அரக்கர்கள் தோற்றுப்போய் பயந்து கொண்டு ஓடினர். இந்தச் செய்திகளையெல்லாம் கேட்டு இராவணன் எல்லையில்லாத கோபமும் வருத்தமும் அடைந்தான்.

தன் மகன் அதிகாயன் மாண்ட செய்தி கேட்டு தான்யமாலினி, தன் கணவன் இராவணன் கால்கிஅளில் விழுந்து அலறி அழுதாள். அரக்கப் பெண்கள் மட்டுமல்லாமல், ஊர்வசி, மேனகை போன்ற தேவலோகப் பெண்களும் வாய்விட்டு அழுது வருந்தினார்கள். தான்யமாலினியைத் தேற்றி அழைத்துச் சென்றனர்.

இராமன் நகர்விட்டு நீங்கிய போது சோகமயமாகக் காட்சியளித்த அயோத்தியைப் போல இலங்கை காட்சியளித்தது. எங்கும் அழுகுரல் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது. இலங்கை நகரத்தில் அரக்கியர் தலைவிரி கோலமாக ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு பெரும் குரல் எழுப்பி அழுது கொண்டிருந்தனர். இவ்வழுகையொலி கேட்டு இந்திரஜித் எழுந்தான். இந்த அழுகுரலுக்குக் காரணம் என்ன, இராவணன் என்று போருக்குப் போய் இராமனிடம் தோற்றானோ? அல்லது இறந்து போய்விட்டானோ? அல்லது அனுமன் இந்த இலங்கையை கடலோடும் பெயர்த்து எடுத்துவிட்டானோ? இந்த அழுகுரலுக்கு என்ன காரணம்? என்ன நடந்தது? ஏன் இந்த அழுகை என்று அருகில் இருந்தவர்களிடம் கேட்டான். பதில் கூறாமல் அனைவரும் நடுங்கினர். தன் தேரை எடுத்துக் கொண்டு நேரே இராவணனிடம் சென்றான் இந்திரஜித்.

தந்தையிடம் கைகூப்பிக் கொண்டு சென்ற இந்திரஜித், "இங்கு என்ன துன்பம் நேர்ந்தது? ஏன் நகரெங்கும் ஒரே அழுகுரல்?" என்று கேட்டான். அதற்கு இராவணன், "இந்திரஜித்! உன் தம்பிமார்களை எமன் உயிர் கவர்ந்தான். கும்பன், நிகும்பன் இவர்களோடு அதிகாயனும் விண்ணுலகுக்குச் சென்றான்" என்றான். இந்திரஜித் பற்களால் அதரத்தைக் கடித்துக் கொண்டு வானத்தைப் பார்த்தான். எல்லோரும் இறந்தார்களோ? என ஏங்கி நைந்தான். "கொன்றவர் யார்?" என்றான்.

"அதிகாயனைக் கொன்றவன் இலக்குவன். அடுத்து, கும்ப, நிகும்பர்களைக் கொன்றவன் அனுமன்." என்று சொல்லி, அதுவரை நிகழ்ந்தது அனைத்தையும் சொன்னான்.

இராவணன் அப்படிச் சொன்னதும் இந்திரஜித் சொல்கிறான், "அவர்களா கொன்றார்கள்? அவர்களைக் கொல்லும்படி நீயே அல்லவா அனுப்பி வைத்தாய்? (கொன்றார் அவரோ? கொலை சூழ்க என நீ கொடுத்தாய்) வந்த மானுடரின் வலிமையை அறிந்திருந்தும், என்றைக்கேனும் என்னைப் போருக்கு அனுப்பினாயோ? நம் படை அழிந்தது" என்று சொல்லி தீப்போல பெருமூச்சு விட்டான்.

"அட்சயகுமாரனைத் தரையோடு தரையாகத் தேய்த்துக் கொன்ற அனுமனை தூதன் என்று கொல்லாமல் உயிரோடு விட்டு விட்டாய். அவனைத் தொடர்ந்து சென்று பகைவர் இருக்குமிடம் அறிந்து அவர்களை அழித்தாயில்லை. புத்தி இல்லாதவனே, உன் மக்களையும் இழந்து விட்டாய். உன் வாழ்க்கை அழிந்தது" என்றான் ஆத்திரத்துடன். "நடந்தது நடந்து போயிற்று. இனி நினைந்து என்ன பயன். என் தம்பி அதிகாயனைக் கொன்ற இலக்குவனைக் கொல்லாமல் இலங்கை நகருக்குள் திரும்ப மாட்டேன், எனக்கு வாழ்வும் வேண்டாம். இலக்குவனைக் கொல்லாவிட்டால் நான் இராவணன் மகன் அல்லன்" என்று சபதம் செய்தான்.

அதற்கு இராவணன், "இந்திரஜித்! நீ கூறிய இந்த வீரச் செயல்களைச் செய்வாயாக! புத்திர சோகத்தால் தவிக்கும் எனக்கு உனது சொற்கள் ஆதரவாக இருக்கிறது" என்றான்.

தந்தையை வணங்கி, வில்லைக் கையில் ஏந்தி போருக்குப் புறப்பட்டான் இந்திரஜித். இந்திரனோடு நடந்த போரில், அவனிடமிருந்து அபகரித்த வில்லை எடுத்துக் கொண்டு, பேய்க்கொடி ஏற்றிய தேரில் ஏறி இந்திரஜித் போருக்குச் சென்றான். அவனோடு சென்ற படையின் அளவை கணக்கிட வல்லார் யார்? எனினும் வேதங்களைக் கற்றுணர்ந்த வான்மீகி, நாற்பது வெள்ளம் என்பதை அப்படியே ஏற்றுக் கொள்வோம் என்கிறார் கவிச்சக்கரவர்த்தி. இவனோடு துமிராட்சசன் (புகைக்கண்ணன்) எனும் வீரனும், மகாபாரிசுவனும் (மாபக்கன்) பெரிய தேரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றனர். போர்க்களத்தில் அதிகாயனைக் கொன்று விட்டுக் காத்திருக்கும் இலக்குவன் எதிரே வரும் படையோடு இராவணன் வரவேண்டும் அல்லது இந்திரஜித் வருவான் என்று தயாராக நின்றான்.

"யார், இவன் வருபவன்? இயம்புவாய்?" என்று விபீஷணனிடம் கேட்டான்.

"வீரனே! இவன் இகல் அமரர் வேந்தனைப் போரில் வென்றவன். இன்று போர் வலிது" என்றான்.

வீடணன் இலக்குவனிடம் சொல்கிறான், "எம்பெருமானே! யான் எண்ணியது ஒன்று உனக்கு உணர்த்த வேண்டியுள்ளது. இவனோடு நீ தனியனாய்ப் போரிட வேண்டாம். பலர் உடனிருந்து காவல் செய்ய, போர் புரிவாய். இவன் மாயையில் வல்லவன்" என்றான்.

"மாருதி, ஜாம்பவான், சுக்ரீவன், அங்கதன், நீலன் ஆகியோர் உன் உடன் இருக்கட்டும்" இவ்வாறு விபீஷணன் கிலக்குவனை வணங்கிக் கூறவும், "நீ கூறியது நன்று" என்று அவன் சொன்னபடி போருக்குத் தயாரானான். இந்திரஜித்தோடு நடைபெறப் போகும் போரில் இலக்குவர்க்குத் துணை நிற்க விரும்பி மேல வாசலில் இருந்த அனுமனும் வந்து சேர்ந்தான். அங்கதன் ஏற்கனவே அங்கு இருந்தான். சுக்ரீவன் தன் பெரிய சேனையுடன் இலக்குவனுக்கு முன்பாக நின்றான். இரு படைகளும் ஒன்றையொன்று நெருங்கி வந்தன. இந்தப் போரைக் காண தேவர்கள் வானத்தில் வந்து குவிந்தனர்.

இரண்டு படைகளும் ஒன்றோடொன்று மோதின. எங்கும் ஆரவாரம். சங்கின் ஒலி, முரசின் முழக்கம், இப்படி எங்கு பார்த்தாலும் பேரொலியும் கூச்சலும் எழுந்தது. மரங்களைப் பிடுங்கி வானரர் தாக்க, தங்கள் தலை மட்டும் சிதறிவிழ, தலையற்ற அரக்கர் முண்டங்கள் போர்க்களத்தில் ஆடுகின்றன. அரக்கர்கள் வானரங்களின் தலைகளை வெட்டியதால், அதன் முண்டங்களில் இரத்தம் மேல் நோக்கிப் பாய, காட்டில் மரங்கள் எரிவதைப் போல காட்சியளித்தன. வானரர் அரக்கரைப் பிடித்துத் தோள்களை ஒடித்தனர். கால்களால் உதைத்தனர். கழுத்தைக் கடித்தனர், கைகளால் ஓங்கி அடித்தனர், தரையில் வைத்துத் தேய்த்தனர். ஆரவாரம் செய்தனர்.

ஊழிக்காலத்தில் சிவன் ருத்ரனாக உலகை அழிக்கும்போது சூலமும் மழுவும் கைக்கொண்டு எட்டு தொள்களுடன் உலகை அழிப்பது போல நீலன் நின்ற இடத்திலிருந்து கொண்டே அரக்கர்களை அழித்தான். ஊழிக்காற்றைப் போல குமுதனும், மலைகளையும் மரங்களையும் பிடுங்கி இடபனும், சாம்பவனும், மயிந்தனும் இந்திரஜித்தை எதிர்த்து வீரப்போர் புரிகின்றனர். இந்திரஜித் தனியனாகப் போர்க்களத்தில் நின்று போரிடுகிறான். சுக்ரீவனும் வந்து மற்ற வானரவீரர்களோடு சேர்ந்து கொண்டு இந்திரஜித்துக்கு எதிராகப் போர் புரிகிறான். அப்போது இந்திரஜித் அனுமனைப் பார்த்து  சொல்கிறான்:-

"நில்லடா! சிறிது நில்லடா! உனை நினைத்து வந்தனென் போர் முனைக்கு நான்,                                    வில் எடாமை, நினது ஆண்மை பேசி உயிரோடு நின்று விளையாடினாய்,
கல் அடா! நெடு மரங்களோ இரு கரத்தினேன் வலி கடப்ப? நீ
சொல்லடா! என இயம்பினான் இகல் அரக்கன், ஐயன் இவை சொல்லினான்".

"அடேய்! நில்லடா! என் தம்பியரைக் கொன்ற உன்னை நினைத்துத்தான் நான் போருக்கு வந்தேன். நான் இதுவரை போருக்கு வரவில்லை என்பதால், நீ உன் ஆண்மையைப் பேசிக்கொண்டும் பலரைக் கொன்று உயிரோடு நின்று கொண்டிருக்கிறாய். நீ எறிந்த மலை என்னைக் கொல்லவில்லை. இனி நீ எறியும் நெடிய மரங்களோ என்னைத் தோற்கடிக்கும்? நான் இப்போது வில்லெடுத்து போருக்கு வந்துவிட்டேன். இனி நீ உன் விளையாட்டைக் காண்பிக்க முடியாது".

அதற்கு அனுமன் அளித்த பதில்:-

"வில் எடுக்க உரியார்கள் வெய்யசில வீரர், இங்கும் உளர்; மெல்லியோய்!
கல் எடுக்க உரியானும் நின்றனன்; அது இன்று நாளையிடை காணலாம்
எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு இடைந்து உயிர் கொடு ஏகுவோர்;
புல் எடுத்தவர்கள் அல்லம்; வேறு சில போர் எடுத்து, எதிர் புகுந்துளோம்".

"வீரத்தில் மெலிந்த இந்திரஜித்! வில்லெடுத்துப் போர் செய்யும் வீரம் உனக்கு மட்டுமே உண்டு என்று நினைத்து பெருமை கொள்ளாதே. எம் பக்கத்திலும் சிறந்த வில் வீரர்கள் உண்டு. அவர்களோடு ஒப்பிட்டால் நீ மெலிந்தவன். நாங்கள் பாறைகளை எடுத்து போர் புரிவதை இழிவாகச் சொல்லுகிறாய். வில்லெடுத்துப் போர் புரியும் எம்மவர் உன்னைக் கொன்றவுடன், உனக்குக் கல் எடுக்க உரியவனும் இங்கே இருக்கிறான். உனக்குக் கல்லெடுப்பது இன்றோ அல்லது நாளையோ நடக்கும் பார்! இந்திரன் உன்னிடம் தோற்றிருக்கலாம், நாங்கள் அப்படிப் புல்லைக் கவ்வுபவர்கள் அல்ல, உன்னை வெற்றி கொள்ளவே வந்திருக்கிறோம்."

"நீ யாருடன் போரிட விரும்புகிறாய்? என்னோடா? அல்லது இலக்குவரோடா? அல்லது உன் தந்தையின் தலைகளைப் பனங்காய் போல வெட்ட வந்திருக்கும் இராமபிரானோடா? சொல்!" என்றான் அனுமன்.

"என் தம்பி அதிகாயன் உயிரைக் குடித்து விட்டு, என் கையால் உயிர் விடப்போகும் இலக்குவன் எனப் பெயர் கொண்ட அறிவிலி எங்கே இருக்கிறான்? அவன் உயிரைக் குடித்து கோபம் அறவே வந்தேன்" என்றான் இந்திரஜித். அவன் மேலும் சொல்கிறான், "யாருடனும் கூட்டு சேராமல் நான் ஒருவனே நின்று விண்ணுளோரையும், மண்ணுளோரையும் ஒருசேர வெல்லும் ஆற்றலுடையவன் நான்". இப்படிச் சொல்லிக் கொண்டே கொடிய தொள்ளாயிரம் அம்புகளைத் தொடுத்து எய்தான். அவை அனுமனைத் தாக்க, அவன் கோபம் கொண்டு ஒரு குன்றை எடுத்துக் கொண்டு  இந்திரஜித்திடம் போய் சொல்கிறான். "நீ இலக்குவனோடு போர் செய்வேன் என்று சொன்னதால் வாளாவிருந்தேன். அன்றி போர் செய்ய இயலாமையால் அல்ல. அந்த சமயத்தில் அம்பு எய்தல்தான் முறையா? உன் அம்புகளுக்கு முன்னால் இந்த மலை உன்னைக் கொன்று விடும், முடிதால் காப்பாற்றிக் கொள்" என்றான்.

அனுமன் எறிந்த மலை இந்திரஜித் மீது பட்டு தூள்தூளாகிறது. இருவரிடையே கடுமையான போர் நடக்க, அனுமன் தளர்ந்து போனான். அப்போது நீலன் வந்து இடையே புகுந்து இந்திரஜித்தோடு மோதினான். இந்திரஜித் விட்ட அம்புகள் நீலனின் உடலைத் துளைத்தன. அவன் நடுங்கினான். அங்கதன் வந்து போரில் கலந்து கொண்டான். அவனும் இந்திரஜித் விட்ட பாணங்களால் அடிபட்டு விழுகிறான். வானர சேனையும், வீரர்களும் அடிபட்டு சோர்வடைந்தது கண்டு இலக்குவன் சினந்து சொல்கிறான்.

"விபீஷணா! நாம் நினைத்தது தவறாகிவிட்டது. நம் படை அழிகிறது. வீரர்கள் அடிபடுகிறார்கள். இவனோடு நானே போர் செய்திருக்க வேண்டும். மற்றவர்களை அனுப்பியது தவறு" என்கிறான்.

அதற்கு விபீஷணன் "ஐயா! நீ சொல்வது உண்மை. முன்பும் தேவர்கள் இவனிடம் இப்படித்தான் தோற்றார்கள். நீ இவனுக்கு ஒரு முடிவு கட்டாவிட்டால் இவ்வுலகம் மீள வேறு வழியே இல்லை" என்றான்.

இந்திரஜித் சாரன் என்ற ஒற்றனை அழைத்து 'இவன் தான் இராமனின் தம்பி இலக்குவனா?' என்கிறான். அவன், 'ஆம்' என்று சொன்னான். இலக்குவனோடு இந்திரஜித் போர் செய்வதற்கு முன்பாக, அரக்கத் தலைவர்கள் அதிகாயனைக் கொன்றவன் இவன் தானே, இவனைக் கொல்வோம் என்று பாய்ந்து வந்தார்கள். அவர்களை இலக்குவன் அம்பு விட்டுக் கொன்று போடுகிறான். இலக்குவனின் தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல் அரக்கர்கள் அழிந்து போகிறார்கள். அரக்கர் சேனை அழிவது கண்டு இந்திரஜித் தன் தேரில் ஏறி இலக்குவனை எதிர்க்க வந்தான். அனுமன் இலக்குவனுக்குத் துணையாக அருகில் வந்து நின்று கொண்டான்.

அனுமன் இலக்குவனிடம் 'அவன் தேர்மீது நின்று போரிட, நீ தரையில் நின்று போரிட வேண்டாம். என் தோள்மீது ஏறிக் கொண்டு போரிடு" என்றான்.

இருவர் வில்லின் நாண் ஒலி முழங்க, எதிர் எதிராய் அம்புகள் பறந்தன. இருவரும் சாரி செய்து போர் செய்ததால், இலங்கையே சுழல்வது போல இருந்தது. இந்த கொடிய போரை தேவரும் கண்ணால் காண முடியாமல் அம்புகள் கூட்டம் மறைத்தது. இருவரும் செய்த கடுமையான போரில் இந்திரஜித் இலக்குவனின் விற்போரைப் பார்த்து வியந்து பாராட்டுகிறான். இலக்குவன் விட்ட ஓர் பாணம் இந்திரஜித்தின் கவசத்தை உடைக்கிறது. இந்திரஜித்துக்கு உதவிட வந்த துமிராட்சசனும், மகாபாரிசுவனும் இலக்குவனின் அம்புகளுக்குப் பலியாகிவிடுகின்றனர்.

பகல் பொழுது மறைந்து, இரவு படிகிறது. இரவு வந்துவிட்டால் இந்திரஜித் வானத்தில் எழுந்து மறைந்து நின்று தாக்குவான் என்று விபீஷணன் எச்சரிக்கிறான். உடனே இலக்குவன் அவன் தேரை உடைக்கிறான். தன் தேர் மண்ணில் விழுமுன்பாக தான் விண்ணில் பாய்ந்து நாகபாசத்தை இவர்கள் மீது ஏவ வேண்டுமென்று வில்லோடு ஆகாயத்தில் பாய்கிறான். மாயையில் வல்ல இவன் என்ன செய்வானோ என்று தேவர்கள் அஞ்சினர். இவன் மேக மண்டலத்துக்கு மேலே போய் நின்று கொண்டான். அங்கு, தான் பெற்ற தவபலத்தால், அணு அளவில் மிகச் சிறிய உருவத்தை எடுத்துக் கொண்டான். அங்கு போய் எவரையும் கட்டிவிடக்கூடிய நாகபாசம் எனும் ஒப்பற்றதோர் அஸ்திரத்தை மந்திரம் சொல்லி எடுத்தான்.

போருக்கு அஞ்சி இந்திரஜித் ஓடி ஒளிந்து கொண்டதாக எண்ணி வானரங்கள் ஆரவாரம் செய்து கொண்டிருந்தன. இலக்குவனும் அங்ஙனமே நினைத்து சிரித்தான். அவனது மாயையை உணராமல் இவர்கள் போர்த் தொழிலைச் செய்யவில்லை. அனுமன் தோளிலிருந்து இலக்குவன் இறங்கி இளைப்பாறினான். அப்படி அவன் இளைப்பாறிக் கொண்டிருந்த நேரத்தில், இந்திரஜித் தனது நாகபாசத்தை இவர்கள் மீது ஏவிவிடுகிறான். அது உலகமே அஞ்சும் வண்ணம் பரவி வந்து இலக்குவன் மீது படிந்து, தோள்களை இறுகக் கட்டிவிட்டது.

உலகமே எதிர்த்தாலும் கலங்காதவனும், எதற்கும் துன்பப்படாதவனுமான இலக்குவன் நாகபாசம் தன்னைக் கட்டியதும், இது இந்திரஜித் செய்த வேலை என்று அறியாதவனாய், இன்னது செய்வது என்று அறியாமல் ஒடுங்கினான். மறைந்திருந்து இந்த மாயத்தைச் செய்தவனைப் பிடிப்பேன் என்று எழுந்த அனுமனும், நாகபாசத்தால் கட்டப்பட்டான். அவன் மட்டுமின்றி வானரப் படை அனைவரையுமே, நாகபாசம் கட்டிப் போட்டுவிட்டது.

கட்டுண்ட வானரர் எழ முயல்வர்; பின்னர் கீழே விழுவர். கண் விழித்து மேலே பார்ப்பார்கள், வாலால் தரையில் அடிப்பார்கள், இலக்குவன் கட்டுண்ட நிலைமை கண்டு வருந்துவார்கள். வானரர்கள் விபீஷணனை நோக்கி இதிலிருந்து விடுபட என்ன பரிகாரம் என்று கேட்டார்கள். அவனால் பதில் சொல்ல முடியவில்லை. ஆயிரம் அம்புகள் தன் மார்பைத் துளைத்தபோதும் அஞ்சாத அஞ்சனைபுத்ரன், இலக்குவனுக்கு நேர்ந்த துயரம் கண்டு வருந்துகிறான். அளவற்ற அம்புகள் துளைத்ததால் அங்கதன் சோர்வடைந்திருந்தான். சுக்ரீவன் நிலையும் அஃதே. நாகபாசத்தை அழிக்கும் வகை இலக்குவர்க்குத் தெரியும், இருந்தாலும், அதனை செயலாற்ற முடியாமல் கட்டுண்டானே என்ன செய்வது?

அதே நேரத்தில் இலக்குவனை நாகபாசத்தால் கட்டிய இந்திரஜித்தும், தன் உடலில் பாய்ந்த அம்புகளால் துன்புற்றிருந்தான். சொன்னதைச் செய்து முடித்து விட்டேன். என் உடல் சோர்வை நீக்கிக் கொண்டு நாளை மற்றதைச் செய்வேன் என்று  அரண்மனைக்குச் சென்றான். இராவணனிடம் சென்று, உன் இடர் தீர்ந்தது என்று தான் நாகபாசம் விட்ட செய்தியைச் சொல்லி எதிரிகள் அழிந்தனர், நான் சோர்வாக இருக்கிறேன், என்று தன் இருப்பிடம் சென்றான் இந்திரஜித்.

நாகபாசத்தால் கட்டுண்டவர்களைக் கண்டு விபீஷணன் வருந்துகிறான். அனலன் அவனைத் தேற்றுகிறான். அனலன் சென்று இராமபிரானிடம் நடந்த செய்திகளைக் கூறுகிறான். இராமனும் மனம் வருந்தி ஆழ்ந்த துயரத்தில் ஆழ்கிறான். இலக்குவர்க்கு ஏற்பட்ட துன்பத்தை எண்ணி இராமபிரான் தேம்புகிறான். உடனே எழுந்து போர்க்களம் செல்கிறான். அங்கு இருள் சூழ்ந்து கிடக்கிறது. உடனே ஒரு அக்னிக் கணையை எடுத்து ஒளி பரவுமாறு விடுத்த அளவில், இருள் அகன்று சூரிய ஒளி போல வெளிச்சம் பரவியது. அங்கு விழுந்து கிடக்கும் இலக்குவனை இராமன் பார்க்கிறான். அவனை வாரி எடுத்து மார்புறத் தழுவிக் கொள்கிறான். இவன் இனி உயிர் பிழைக்கமாட்டான் என்று எண்ணி கண்ணீர் உகுக்குகிறான்.

இராமன் விபீஷணனை அழைத்து இதை ஏன் முன்பே சொல்லி எச்சரிக்கவில்லை என்று கேட்டான். அதற்கு விபீஷணன், "இலக்குவன் இந்திரஜித்தைக் கொல்லுவான் என்றுதான் எண்ணியிருந்தேன், அதனால் சொல்லத் தோன்றவில்லை" என்றான். அதுமட்டுமல்ல, இங்கு எவரும் உயிர் இழக்கவில்லை, அனைவருமே நாகபாசத்தால் கட்டுண்டு இருக்கிறார்கள், அவ்வளவே என்றான் விபீஷணன்.

மறுபடி இராமன் விபீஷணனிடம், இந்த நாகபாசத்தைக் கொடுத்தது யார்? இந்த அஸ்திரம் எத்தன்மையது? இதிலிருந்து விடுபட என்ன வழி, அவற்றைக் கூறு என்று வினவினான். அதற்கு விபீஷணன் சொல்கிறான், "இந்த உலகத்தைப் படைத்த பிரம்மன் வேள்வியில் இந்த நாகபாசத்தை உண்டாக்கினான்.  இதை சிவன் வேண்டிப் பெற்றுக் கொண்டான். இந்திரஜித் செய்த தவத்தை மெச்சி, சிவபெருமான் இந்த அஸ்திரத்தை அவனுக்குக் கொடுத்தான். ஊழிக்கால இறுதியில் உலகம் அழியும்படி இடிக்கும் தன்மையுள்ளது இது" என்றான் விபீஷணன். இந்திரன் தோள்களைக் கட்டியதும் இந்த நாகபாசம்தான். சீதையைத் தேடப் போன அனுமனைக் கட்டியதும் இதே நாகபாசம்தான். இதை ஏவியவனே விடுவித்தாலன்றி இந்த நாகபாசம் விடாது. உயிருள்ளவரை இது பிணைத்திருக்கும் என்றான்.

இதனைக் கேட்ட இராமன் இந்த இலங்கையையும், மூவுலகங்களையும் ஓர் கணையால் அழிப்பேன் என்று எழுந்தான். "ஏ! விபீஷணா! என் தம்பி இலக்குவனே இறப்பானானால் எனக்கு இனி புகழ் என்ன? பழி என்ன? பாவம் என்ன? தருமம்தான் என்ன? அவனுக்கு முன் எனக்கு எதுவுமே நல்லன அல்ல. ஒருவன் செய்த தீமைக்காக உலகத்தை அழிப்பது முறையன்று என்ற அறநெறி அவன் மனதில் தோன்றவே, கோபம் தணிந்தான். இப்படி இராமன் சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் வைகுண்டத்தில் திருமாலை எப்போதும் தாங்கும், கருட பகவான் வானுலகத்திலிருந்து அங்கு வந்து சேருகிறான். அவன் களத்தைச் சுற்றித் தன் சிறகை விரித்தபடி பறந்து வருகிறான்.

இலக்குவனும் மற்றவர்களும் நாகபாசத்தால் கட்டுண்டு துன்பப்படுகிறார்கள் என்பதை அறிந்து, அதனால் மனம் தளர்ந்து சோர்ந்து போய்விட்ட ஸ்ரீ இராமனின் திருமேனியைத் தரிசிக்க விரும்பி, கருடன் கோடிகாதம் வரை பறந்து வந்து, அவனது கூரிய கண்கள் கண்ணீர் சிந்த, துன்பம் மிகுந்தவனாய், கடல் அலைகள் சிதறும்படி, உலகத்தின் இருள் நீங்கும்படி, வேதங்களின் கோஷம் கேட்கவும், உலகத்தின் உயிர்கள் உய்யும் பொருட்டும், நாகபாசம் கட்டிய பாம்புகள் வலி கெட்டு அழியும்படியாக அங்கு வந்து சேர்ந்தான். வானத்தில் பறந்தபடியே வந்த கருட பகவான், ஸ்ரீ இராமனின் திருமேனியைக் கண்டவுடன் அங்கிருந்தே கைதொழுதான்.

மனித வடிவில் வந்து தோன்றிய முழுமுதற் கடவுளே! மானுட வடிவில் வந்து இலக்குவரின் துன்பத்தைக் கண்டு வருந்துகின்ற ஸ்ரீ இராமா! மற்றவர்களின் மனத் துன்பத்தைப் போக்கும் நீயே, மனம் தளர்ந்து வருந்தலாமா? என் தந்தையே வருந்தாதே. இப்படி கருடன் ஸ்ரீ இராமபிரானைத் தொழுது வேண்டுகிறான். இப்படியாக பற்பல தோத்திரங்களைச் சொல்லி, வேத வேதாந்தக் கருத்துக்களைச் சொல்லி, பரம்பொருளின் பெருமையெல்லாம் சொல்லி துதிக்கிறான் கருடபகவான். இந்தப் பகுதியில் வேத வேதாந்தக் கருத்துக்களை கருடன் வாக்காகக் கம்பர் பெருமான் கூறியிருக்கும் சிறப்பு அந்தப் பாடல்களைப் படித்து இன்புறத் தக்கவகையில் அமைந்திருக்கிறது.

வானத்தில் வட்டமிட்டுச் சுற்றிப் பறந்து வந்து, தன் விரித்த சிறகு எல்லா திசைகளையும் காணும்படியும் பின் மெல்லத் தாழ்ந்து பறந்து ஸ்ரீ இராமன் அயல் வந்து இறங்கினான் கருடன். கருடனுடைய நிழல் பட்ட மாத்திரத்தில் இலக்குவன் முதலானோரைக் கட்டியிருந்த நாகபாசம் விடுபட்டு விட்டது. மகா உத்தமனாகவும், நேர்மையானவனாகவும், பிறர் நன்மைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட தியாக மனப்பான்மையுடையவனும், அறிவு வழியில் அறத்தைப் பின்பற்றி நடப்பவனுமான ஒருவன் மீது புனைந்துரைத்த பொய்ப்பழி விலகியது போல நாகபாசம் விலகியது.

நாகபாசம் விடுபட்டு, தூங்கி எழுந்தவர் போல உயிர் பெற்று எழுந்த இலக்குவனை இராமன் தன் மார்போடு தழுவிக் கொள்கிறான். பிறகு மூன்றாம் பிறை போன்ற நகத்தையுடைய கருடன் முன்பாக வந்து கருணையோடு சொல்கிறான்:-

"ஐய! நீ யாரோ? எங்கள் அருந்தவப் பயத்தின் வந்து, இங்கு
எய்தினை; உயிரும் வாழ்வும் ஈந்தனை; எம்மனோரால்
கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை; மீட்சி
செய்திறம் இல்லையால்' என்றான் தேவர்க்கும் தெரிகிலாதான்."

இராமன் மானுடப் பிறவியாக வந்துவிட்டதாலோ என்னவோ, அந்தக் கருடனைப் பார்த்துக் கேட்கிறான்: "ஐயா, தாங்கள் யாரோ? நாங்கள் செய்த தவப் பயனாய் இங்கு வந்து சேர்ந்தாய். நீ வந்ததால், நாகபாசத்தால் கட்டுண்டவர்கள் உயிர் பெற்றனர். நாங்கள் செய்யும் கைமாறை ஏற்றுக் கொள்ளக் கூடியவனாகவும் தங்களைப் பார்த்தால் தெரியவில்லை. உனக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம்!" என்றான் இராமபிரான். "இதற்கு முன்பு நாம் பார்த்ததும் இல்லை. எங்களைப் பற்றி உன்னிடமோ, உன்னைப் பற்றி எங்களிடமோ யாரும் சொல்லிக் கேட்டதும் இல்லை. நீ எங்களிடம் நன்றிக் கடன் படவும் இல்லை, கொடுப்பது மட்டுமே கடமையாகக் கொண்டாய். உயிர் இருக்கிறதா இல்லையா என்று சந்தேகமாக இருந்த இவர்களுக்கு உயிர் கொடுத்த உத்தமனே, நாம் முன்பு பழகிய நண்பர்களும் இல்லை, உனக்கு எப்படியப்பா நாங்கள் கைமாறு செய்ய முடியும், சொல்" என்றான்.

அப்போது அனுமன் அங்கே வந்து "இலக்குவன் இறந்தான் என்று அன்னை சீதை துயரத்தில் இருப்பாள். அரக்கர்கள் மகிழ்ந்து களிப்பர். நாம் பிழைத்து விட்டோம் என்று அனைவரும் தெரிந்து கொள்ள பெருத்த ஆரவாரம் செய்வோம்" என்றான்.

இதற்கு இராமன் உடன்படவே, வானரர் அண்டமே அதிரும் வண்ணம் ஆரவாரம் செய்தனர். இந்த ஆரவார ஒலியை இராவணன் கேட்கிறான்.. இலங்கையில் இருவர் மட்டுமே தூங்கவில்லை. சதாகாலம் இராமனையே எண்ணி வாடும் சீதை ஒன்று. அந்த சீதையையே எண்ணி வேறு சிந்தனை இல்லாத இராவணன் மற்றொன்று. வானரர்களையும், மானுடர்களையும் அழித்து விட்டேன் என்று இந்திரஜித் சொன்ன சொல் உண்மை அல்லவே. இதோ! வானரங்களின் ஆரவாரம் கேட்கிறதே, என்று கோபமாகச் சிரித்தான் இராவணன்.

"ஆகா! இது என்ன? இலக்குவனின் வில்லின் நாணொலி கேட்கிறதே. அனுமனது ஆரவாரம் என் செவியைப் பிளக்கிறதே. சூரியன் மகனின் ஆரவாரம் திக்கெட்டும் ஒலிக்கிறதே! ஓகோ! இவர்கள் நாகபாசப் பிணிப்பிலிருந்து விடுபட்டு விட்டார்கள்" என்று உணர்ந்தான் இராவணன். உடனே எழுந்து இந்திரஜித்தின் மாளிகைக்கு விரைகிறான். உடல் புண்களால் அவதிப்பட்டு இந்திரஜித் படுக்கையில் புரள்கிறான். இப்படி அவதியுற என்ன காரணம் என்று இராவணன் கேட்க, இலக்குவனின் அம்பு பட்ட காயம் என்கிறான் இந்திரஜித்.

"அதோ! கேள். பகைவரின் ஆரவார ஒலி. உனக்குக் கேட்கவில்லையா? என்கிறான் இராவணன்.

இந்திரஜித் வியந்து போகிறான். எப்படி நடக்க முடியும் இது? நாகபாசத்தால் கட்டுண்டவர் மீள்வது எங்ஙனம்?" என்றான்.

அப்போது தூதுவர் வந்து போர்க்களத்தில் நடந்ததைக் கூறுகிறார்கள். "நாகபாசத்தால் கட்டுண்டிருந்தவர்களையும், அம்புகள் பாய்ந்து உயிர் துறந்து விழுந்து கிடந்தவர்களையும், தசரதகுமாரன் இராமன் அங்கு வந்து இவர்களுக்கு இந்தச் செயலைச் செய்ததால், இந்த உலகத்தையே அழிப்பேன் என்று சபதம் ஏற்ற நேரத்தில், வானுலகத்திலிருந்து கருடபகவான் (வானுறை கலுழன்) பறந்து வந்து அனைவரையும் உயிர்ப்பித்து விட்டான்" என்றார்கள்.

இராவணன் இந்திரஜித்தை உடனே போருக்குப் புறப்படும்படி சொன்னான், அவன் தன் உடல் காயங்களுக்கு மருந்திட்டு ஓய்வு கொடுத்த பின் மறுநாள் போவதாகச் சொல்லவும், இராவணனும் அதற்கு 'நன்று' என்று சம்மதம் தருகிறான்.

வானரர்கள் மூர்ச்சை தெளிந்து எழுந்து செய்த ஆரவாரத்தைக் கேட்டு அரக்கர் படைத்தலைவர்கள் தாங்கள் போருக்குச் செல்ல இராவணனிடம் அனுமதி கேட்டனர். அப்போது தூதர்கள், அந்த அரக்கர் படைத்தலைவர்கள் இந்திரஜித்தைக் கைவிட்டு ஓடி வந்தவர்கள் என்ற தகவலைச் சொல்ல, இராவணன் பெரும் கோபம் கொண்டான். கிங்கரர்களிடம் அவர்களது மூக்கை அரியுமாறு கட்டளையிடுகிறான். அப்போது அங்கிருந்த மாலி என்பான் இராவணனிடம், போரில் தோற்று ஓடி வந்ததற்காக மூக்கை அரிதல் நீதியல்ல என்கிறான். இராவணன் அவர்களை மன்னித்து பத்து வெள்ளம் சேனையோடு போருக்கு அனுப்புகிறான். படைத் தலைவர்கள் சேனைகளுடன் போர்க்களம் போகின்றனர். இவர்கள் போருக்கு வந்த போது, இவர்களைப் பற்றிய விவரங்களை விபீஷணன் இராமனுக்குச் சொல்கிறான்.

வானரப் படைகளுக்கும், அரக்கர் சேனைக்குமிடையே பெரும் போர் நடக்கிறது. அரக்கன் புகைக்கண்ணன் அனுமனுடனும், மாபெரும் பக்கன் என்பவன் அங்கதனுடனும், மாலி நீலனுடனும், வேள்வியின் பகைவன் இலக்குவனிடமும், சூரியன் பகைவன் சுக்ரீவனிடமும், வச்சிரத்தெயிற்றன் இடபனுடனும், பிசாசன் பனசனுடனும் போரிடுகின்றனர். போருக்கு வந்த அரக்கர்களின் பத்து வெள்ளம் சேனையில், இராமன் ஆறு வெள்ளம் சேனையையும், இலக்குவன் நான்கு வெள்ளம் சேனையையும் அழித்து விடுகின்றனர்.

இரவு நேரம் நெருங்கி வந்தது. அன்றைய போரில் அனுமன் புகைக்கண்ணனைக் கொன்றான். அங்கதன் மாபெரும் பக்கனை இரண்டாய் பிளந்து கொன்றான். மாலியும் நீலனும் போரிட்டபோது, இலக்குவன் அவன் கையை வாளோடு வெட்டி வீழ்த்தினான், வேள்விப் பகைவனை சுக்ரீவன் மாய்த்தான். வச்சிரத்தெற்றனோடு இடபன் போர் செய்ய, அனுமன் அவன் உடலைக் கிழித்துக் கொன்றான். பிசாசன் தலையை இலக்குவன் கொய்தான், தூதர்கள் செய்தி சொல்ல இராவணன் இருக்குமிடம் ஓடினர்.

படைத் தலைவர்கள் மாண்ட செய்தியை தூதர்கள் மூலம் இராவணன் அறிகிறான். அப்போது கரன் என்பவனுடைய மகன் மகரக்கண்ணன், காட்டில் தன் தந்தையைக் கொன்ற இராமனைத் தான் கொல்வதாகக் கூறி போருக்குப் புறப்படுகிறான். மகரக்கண்ணன் ஐந்து வெள்ளம் சேனையோடு, இராவணன் அனுப்பிய மற்றொரு ஐந்து வெள்ளம் சேனையோடும், போர்க்களம் சென்றான். மகரக்கண்ணன் தவச் சிறப்பாலும், மாயையாலும் இடி, காற்று, தீ இவற்றை உண்டாக்கி, தன்னைப் போல் பல உருவங்களைத் தோற்றுவித்துப் போர் செய்தான். இராமன் பல உருவங்களில் ஒன்றில் மட்டும் இரத்தம் வழிவது கண்டு, அவனே உண்மையான மகரக்கண்ணன் என்று அறிந்து அவன் மீது அம்பு செலுத்தி அவனைக் கொல்கிறான். இந்த செய்தியைக் கேட்டபின் இந்திரஜித் போருக்குப் புறப்படுகிறான்.

போர்க்களத்தில் அனுமன் தோளில் இராமனும், அங்கதன் தோளில் இலக்குவனும் அமர்ந்து போர் புரிகின்றனர். அரக்கர் சேனை பயந்து ஓட, இந்திரஜித், தன் ஒருவனே இராம லக்ஷ்மணரை எதிர்த்துப் போர் புரிந்தான். இலக்குவன் இராமனைத் தொழுது இந்திரஜித்துடன் போர் செய்தான். இருவருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. இந்திரஜித் மாயையால் வானம் சென்று, பின் மறைந்தான். அவன் மீது அயன் படை (பிரம்மாஸ்திரம்) தொடுப்பேன் என்று இலக்குவன் சொல்ல, அது அவனை மட்டுமல்ல மூவுலகங்களையும் அழிக்கும் வேண்டாம் என்று இராமன் தடுத்தான். தோற்றுப் போன இந்திரஜித் மறைந்து ஒருவரும் அறியாமல் இலங்கைக்குச் சென்றான். இவனைக் காணாததால் இராம லக்ஷ்மணர் உள்ளிட்ட அனைவரும் போர் உடையைக் களைந்தனர்.

இராமனுடைய வானர வீரர்களுக்கு உணவுப் பொருட்களைத் திரட்டிக் கொண்டு வருமாறு விபீஷணனை இராமபிரான் அனுப்பி வைக்கிறார். தனது படைக்கலன்களுக்கு பூஜை செய்ய வேண்டி இராமனும் தனியே சென்று விடுகிறார். இலக்குவன் மட்டும் போர்க்களத்தில் இருந்தான். தோற்றோடிய இந்திரஜித் இலங்கை சென்று இராவணனுடன் கலந்து பேசி, தான் மறைந்து நின்று பிரம்மாஸ்திரத்தை விடுவது என முடிவு செய்தான். மகோதரனை அனுப்பி, மாயப் போர் ஒன்றை நீ செய்து கொண்டிரு, நான் பிரம்மாஸ்திரத்தை செலுத்திவிடுகிறேன் என்று சொல்ல, மகோதரன் செல்கிறான்.

மாயப்போர் என்பது போர்க்களத்தில் ஒருவரையொருவர் பார்க்க முடியாமல் ஆங்காங்கே பிரிந்து நின்று போர் செய்கிறார்கள். அப்படி தனித்து நிற்கும் இலக்குவனிடம் அனுமன் நிலைமையை விளக்குகிறான். இதனைக் கேட்ட இலக்குவன் பாசுபதாஸ்திரம் ஏவுகிறான். அரக்கரின் சேனையும், அவர்களது மாயமும் எரிந்து அழிந்து போகிறது. இருள் மறைந்து ஒளி வெளிப்படுகிறது. மகோதரன் தன் மாயை விலகியதும் ஓடிவிடுகிறான். பிரம்மாஸ்திரத்தை ஏவ இதுவே தக்க தருனம் என்று இந்திரஜித், ஆலமரம் ஒன்றை அடைந்து,  அதற்கான வேள்வியைச் செய்தான். உடனே தேவர் முதலானோர் அறியாதபடி பிரம்மாஸ்திரத்துடன் விசும்பில் சென்று மறைந்தான். அப்போது மகோதரன் இந்திரனைப் போல மாறுவேடம் தரித்து ஐராவதத்தின் மீது ஏறிக்கொண்டு வானரர்களுக்கு எதிராகப் போர் செய்தான்.

இலக்குவன் மகோதரனின் மாயையால் அவன் இந்திரன் போல் வந்திருக்கிறான் என்பது தெரியாமல், அனுமனிடம் சொல்கிறான் "முனிவர்களும், இந்திரன் முதலானவர்களும் ஏன் நம்மீது போர் செய்கிறார்கள்" என்று. இந்த நேரம் பார்த்து இந்திரஜித் பிரம்மாஸ்திரத்தை இலக்குவன் மீது ஏவிவிட்டான். அவன் செயலற்று தளர்ந்து வீழ்ந்தான். இந்திரனாய் வந்தவனைக் கொல்வேன் என்று எழுந்த அனுமனும் பிரம்மாஸ்திரம் தாக்கி கீழே விழுந்தான். சுக்ரீவன் முதலான மற்ற வானர வீரர்கள் அனைவருமே வீழ்ந்தனர். வானரங்கள் யாவரும் சாய்ந்து வீழ்ந்தனர். வானர வீரர்களொடு இலக்குவன் இறந்து வீழ்ந்தான். இந்திரஜித் வெற்றி சங்கை ஊதுகிறான். இராவணனிடம் சென்று நடந்ததைக் கூற, இராமன் சாகவில்லையா என்று கவலையோடு கேட்கிறான்.

இராமன் போர்க்களத்தைவிட்டு வெகுதூரம் சென்று விட்டதால் அவனை பிரம்மாஸ்திரம் தாக்கவில்லை என்று இராவணனிடம் சொல்லிவிட்டு, தன் மாளிகைக்குச் சென்று விடுகிறான் இந்திரஜித். இராமன் படைக்கலப் பூஜையை முடித்துவிட்டு, அக்னி அஸ்திரத்தால் வெளிச்சம் உண்டாக்கி போர்க்களம் வந்தான். அங்கே பிரம்மாஸ்திரத்தால் தாக்குண்டு கிடக்கும் ஒவ்வொருவராய்ப் பார்க்கிறான். அதிர்ந்து போனான் இராமன். தன் படை சர்வ நாசம் ஆகிவிட்டதை அறிந்து அழுகிறான். தம்பி இலக்குவனைக் கண்டு உணர்வு ஒடுங்கினான். தாங்க முடியாத துக்கத்தால் அழும் இராமனைத் தேற்றுவார் எவருமில்லை. துணை வந்தோர் அனைவரும் இறந்து போயினர். இராமபிரானின் நிலை கண்டு தேவர்கள் மிகவும் வருந்தினர்.

உணர்வு திரும்பிய இராமன் கண்விழித்துப் பார்த்தான். இலக்குவன் உயிரோடு இல்லை என்பதைக் குறிப்பினால் காண்கிறான். இலக்குவனைப் பிரிந்த துக்கத்தால் தாங்கமுடியாத சோகத்தினால் அழுதான் அரற்றினான். பொறிகளும், புலன்களும் ஆற்றல் குன்றிப் போயின.தானும் மாண்டுபோவதே நன்று என்று தம்பியைத் தழுவிய நிலையில் மயங்கிக் கிடந்தான். தேவர்கள் தவித்தனர். அரக்கரக்ள் ஓடிச் சென்று வானரப் படையோடு இலக்குவனும் இறந்தொழிந்தான், தம்பியின் மறைவால், இராமனும் இறந்தான், உன் பகை முடிந்தது என்று சொன்னார்கள்.

பிரம்மாஸ்திரத்தால் இராம லக்ஷ்மணர் உட்பட வானர சேனை முழுவதும் மாண்டார்கள் என்ற செய்தி கேட்டு, மிக்க மகிழ்ச்சியடைந்த இராவணன் வெற்றிவிழா கொண்டாட ஏற்பாடு செய்கிறான். அவன் மருத்தன் என்பானை அழைத்து, "நீ முன்னே சென்று போர்க்களத்தில் இறந்து கிடக்கும் அரக்கர்களின் உடல்களையெல்லாம், ஒன்றுகூட விடாமல் அனைத்தையும் எடுத்துக் கடலில் வீசிவிடு" என்று சொல்லி, இதை உன்னையன்றி வேறு எவரிடமும் சொல்லக்கூடாது, சொன்னால் உன் தலையைச் சீவி விடுவேன் என்று கூறி அனுப்புகிறான். அரக்கர்களின் பிணங்கள் போர்க்களத்தில் இருந்தால் பார்ப்பவர்களுக்கு இராவணன் பக்கமும் அதிக அரக்கர்கள் இறந்து போனார்கள் என்று நினைப்பார்களாம், அதனால் அவற்றை எடுத்துக் கடலில் வீசும்படி சொல்கிறான். அவன் கூறியபடியே அந்த மருத்தனும், அத்தனை அரக்கர் உடல்களையும் கடலில் தூக்கிப் போட்டுவிட்டான்.

"முந்த நீ போய், அரக்கர் உடல் முழுதும் கடலில் முடுக்கிடு; நின்
சிந்தை ஒழியப் பிறர் அறியின் சிரமும் வரமும் சிந்துவன்".

பிறகு இராம இலக்குவர்க்கு நேர்ந்த கதியை சீதைக்குக் காட்டுங்கள் என்று சொல்ல, அரக்கியர் சீதையை ஓர் புஷ்பக விமானத்தில் ஏற்றி யுத்த களத்திற்கு மேல் கொண்டு வந்து காட்டினார்கள். அங்கே சீதாதேவி, "கண்டாள் கண்ணால் கணவன் உரு; அன்றி ஒன்றும் காணாதாள்" விஷம் உண்டவள் போல சீதை உடல் ஓய்ந்தாள். உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள். தாமரைப்பூ தீயில் விழுந்தது போல ஆனாள்.

"மங்கை அழலும் - வான் நாட்டு மயில்கள் அழுதார்; மழவிடையோன்
பங்கின் உறையும் குயில் அழுதாள்; பதுமத்து இருந்த மாது அழுதாள்
கங்கை அழுதாள்; நாமடந்தை அழுதாள்; கமலத் தடங்கண்ணன்
தங்கை அழுதாள்; இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார்".

சீதை அழுவது கண்டு, தேவமாதர்கள் அழுதார்கள்; உமையம்மை அழுதாள்; மகாலட்சுமி அழுதாள்; கங்கை அழுதாள்; சரஸ்வதி அழுதாள்; கொற்றவை அழுதாள், இரக்கமென்பதே இல்லாத அரக்கியர்களும் அழுதார்கள்.

சீதை மூர்ச்சையுற்றாள், நீர் தெளித்து தெளியச் செய்து, அமரச் செய்தார்கள். கயல்மீனை தாமரை மலரால் அடிப்பது போல் தன் கைகளால் கண்களில் அறைந்து கொண்டு அழுதாள் சீதை. கவிச்சக்கரவர்த்தி கம்பரின் சொற்திறனை இதோ பார்ப்போம்.

"அடித்தாள் முலைமேல்; வயிறு அலைத்தாள் அழுதாள்; தொழுதாள், அனல் வீழ்ந்த
கொடித்தான் என்ன, மெய் சுருண்டாள், கொதித்தாள்; பதைத்தாள்; குலைவுற்றாள்;
துடித்தாள்; மின்போல்; உயிர் காப்பச் சோர்ந்தாள், சுழன்றாள்; துள்ளினாள்;
குடித்தாள் துயரை, உயிரோடும் குழைத்தாள்; உழைத்தாள், குயில் அன்னாள்".

கணவனை இழந்த பெண்களிடத்து இயல்பாக நிகழும் செயல்களை இங்கே கவிஞர் பெருமான் முறைப்படுத்துகிறார்.

"விழுந்தாள்; புரண்டாள்: உடல் முழுதும் வியர்த்தாள்; அயர்த்தாள்; வெதும்பினாள், எழுந்தாள்; இருந்தாள்; தளிர் கரத்தை நெரித்தாள்; சிரித்தாள்; ஏங்கினாள்; 'கொழுந்தா! என்றாள், 'அயோத்தியர் தம் கோவே! என்றாள்; எவ்வுலகும் தொழும் தாள் அரசேயோ! என்றாள்; சோர்ந்தாள் அரற்றத் தொடங்கினாள்".

"ஓ! அறக்கடவுளே! உன்னையே பற்றி நின்று பாவமே செய்யாதவரை நீ நீத்தனையோ? பாவத்தையே செய்யும் அரக்கர் பக்கம் சேர்ந்தனையோ? கொடியவனே, இதுதான் உன் அருளோ? வாய்மையற்ற விதியே! வேதநெறியன்றி வேறு நெறி அறியாதவர் படும் துயரை பார்த்தனையோ? அன்றி எனை சோதிக்கத் துணிந்தனையோ? உன்னை மதிக்க மாட்டேன்! ஏ! எமனே! உயிரான இராமனை கவர்ந்து உடலான என்னை முடிவற்ற துன்பத்தில் ஆழ்த்தினையே! ஏ! இராமா!

"எண்ணா மயிலோடும் இந்தது நின்
புண்ணாகிய மேனி பொருந்திடவோ
மண்ணார் உயிரே! இமையோர் வலியே
கண்ணே! அமிழ்தே! கருணாகரனே!"

"நீ மிதிலைக்கு வந்து என் கைப்பிடித்தது உன் உயிரை விடத்தானோ? கோசலை  உயிர் வாழாள்! உத்தமத் தம்பிகள் உயிர் துறப்பர். கொடுங் கைகேயி கருத்தும் இதுதானோ? அயோத்தியில் தங்கியிரு என்று நீ சொன்ன போது கேட்காமல், கானகம் வந்து பொன் மான் பின் உன்னை ஏவி, உன் உயிரை பலி கொண்டேனே!" என்று கதறுகிறாள்.

இலக்குவனைப் பார்த்து, "மேதையே! இளையவனே! காட்டுக்கு வரும்போது 'இராமனுக்கு முன்னம் மடிந்திடு' என்று அன்னை சுமத்திரை சொன்னபடியே செய்து விட்டாயோ? பூவையும், தளிரையும் இட்டு இராமனைத் தூங்கச் செய்து, கண்விழித்துக் காத்திருந்த நீ இன்று அரக்கர் விட்ட கணைகளின் மேல் உறக்கம் கொண்டாயோ? இப்படிப் புலம்பிக் கொண்டே இராமன் உடலின் மீது விழுவதற்கு எழுந்த சீதையை திரிசடை தடுத்தாள். சீதையை அன்புடன் தழுவிக் கொண்டு அவள் காதோடு சொன்னாள், "அம்மா! அன்னமே! முன்பு மாயமானை அனுப்பவில்லையா? உன் தந்தை ஜனகன் என்று போலியாக ஒருவனைக் காட்டவில்லையா? முன்பு நாகபாசம் கட்டியதை விட்டு அவர்கள் மீண்டு வரவில்லையா? அதையெல்லாம் நினைத்துப் பார்! இவையெல்லாம் அரக்கர் செய்யும் மாயங்கள். இதைக் கண்டு இறந்து போக நினைக்கலாமா? என்று ஆறுதலாய் கூறினாள்.

"அன்னையே! நீ முன்பு கண்ட கனவுகளை எண்ணிப் பார்! நல்ல நிமித்தங்களை நினைத்துப் பார்! உனது கற்பு நெறியும், அரக்கர்தம் பாவச் செயல்களும், தர்மம் தாங்கும் அண்டர்நாயகரின் வீரத்தையும் எண்ணிப் பார்! புண்டரீகற்கும் உண்டோ இந்த நிலை? இந்தப் புலையர்க்கு இல்லாமல்! அங்கே பார்! ஆழியான் ஆக்கை தன்னில் அம்பு ஒன்றும் பாயவில்லை. இளையவன் வதனம் இன்னும் ஊழிநாள் கதிரவன் போல் ஒளிபெற்று காண்கிறது. இவர்களது உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை. வீணாக வருந்தாதே தாயே!" என்றாள்.

"இராமபிரான் இறந்திருந்தால் ஏழேழ் உலகங்களும் தீய்ந்து போயிருக்கும். இரவியும் வானத்தில் திரிவானா? பிரமன் முதலான உயிர்களெல்லாம் இறந்திருக்காதா? இவைகள் உள்ளன என்றால் இராமன் உயிரும் உண்டு. தர்மம் இருக்கிறது, கவலையை விடு. மங்கையே! பார் அங்கே மாருதியை. நீ அளித்த வரத்தின் பின்னும் அவனுக்கும் உண்டோ மரணம். உன் கற்புக்கு அழிவுமில்லை. மாருதிக்கு மரணமும் இல்லை.

இங்குள்ள நிலை பிரம்மாஸ்திரத்தால் வந்த நிலை. இது மாறிவிடும். கவலையை விடு. தேவர்களின் எண்ணமும் மாறிவிடுமோ?".

"அன்னையே! நான் தேவர்களைக் கண்டேன். அவர்கள் தங்கள் பொற்கரங்களைச் சிரமேல் கூப்பி முதல் தேவர் மூவரைக் கண்டால் அந்த முறையில் வணங்கிச் சென்றார். துன்பம் சிறிதும் கொள்ளவில்லை. அன்னையே அஞ்ச வேண்டாம். கிணற்று நீர், கடல் நீரை விழுங்க வல்லதோ? கற்புடைச் செல்வியே! நீ இப்போது நின்று கொண்டிருக்கிறாயே புஷ்பக விமானம், இது உயிர் நீங்கிய பிணத்தையோ, கைம்பெண்டிரையோ தாங்கிக்கொள்ளாத இயல்புடையது. இப்போதாவது புரிகிறதா இராமன் இறக்கவில்லை என்று?" இவ்வாறு திரிசடை சீதையிடம் சொல்லவும், மனம் தேறி ஆறுதல் பெற்றாள்.

சீதை திரிசடையிடம், " அன்னையே! இதுவரை நீ சொன்ன எதுவும் பொய்க்கவில்லை. எனவே உன்னை தெய்வமாக நினைத்து, நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்றாள். அரக்கியர்கள் சீதை இருந்த புஷ்பக விமானத்தை மீண்டும் அசோக வனத்திற்கே கொண்டு சென்று அங்கே சீதையைக் காவலில் வைத்தனர்.

வானர சேனைக்கு உணவுப் பொருட்களைச் சேகரிக்கச் சென்றிருந்த விபீஷணன், யுத்த களத்துக்குத் திரும்பி வருகிறான். பிரம்மாஸ்திரத்தால் மாண்டு கிடக்கும் வானர சேனையைக் காண்கிறான். எல்லோரும் இறந்து கிடப்பது கண்டு மயங்கி விழுந்தான். நினைவு திரும்பியதும் இராம இலக்குவரைத் தேடுகிறான். பிணங்களுக்கிடையே இலக்குவனைத் தழுவியபடி இராமன் விழுந்து கிடப்பதைக் கண்டு கண்ணீர் விட்டுக் கதறுகிறான். அவன் விட்ட கண்ணீரால் அவன் இராமன் மீது வைத்த அன்பு புலனாகிறது. இராமனது உடலை ஆராய்ந்து பார்த்த விபீஷணன், அவன் உடலில் அம்பு துளைத்த வடு எதுவும் இல்லை, எனவே இறக்கவில்லை என்று ஆறுதல் அடைகிறான். நடந்தது அனைத்தையும் ஊகித்து அறிந்து கொண்டான். இதிலிருந்து விடுபட என்ன வழி என்று ஆராய்ந்தான். குவிந்து கிடக்கும் இந்த பிணக் குவியலுக்கிடையே இறவாமல் எவரேனும் இருக்கிறார்களா என்று தேடினான். 'வாய் மடித்து, இரண்டு கைகளும் குறுக்கிய நிலையில், கண்கள் தீ உக, திரண்ட தோள் அனுமன் யானைகளுக்கு மேலாகக் கிடப்பதைக் காண்கிறான். அவன் அருகில் சென்று விபீஷணன் உடலில் பாய்ந்திருந்த அம்புகளை நீக்கி, முகத்தில் நீர் தெளிக்க அவன் விழித்து எழுந்தான். எழுந்ததும் இராகவன் பெயரைச் சொல்லி வாழ்த்தினான்.

'அழுகையோடு உவகையுற்ற விபீஷணன், ஆர்வம்கூர, தழுவினன் அவனை; அனுமனும் 'இராமன் நலமா?' என்றான். 'நன்கு உளன்' என்று விபீஷணன் உரைத்ததும் தொழுதான். இராமனுக்கும், இலக்குவர்க்கும் வானர சேனைக்கும் ஏற்பட்ட இடரை நீக்க என்ன வழி என்று சிந்தித்தான். ஆம்! ஜாம்பவான் எங்கே? அவனுக்கு இறப்பே கிடையாது. அவன் நமக்கு ஓர் நல்ல வழிகாட்டுவான் என்று அவனைத் தேடினான். ஜாம்பவானை இப்போதே சென்று காண்போம் என்று விபீஷணனும் அனுமனும், இருட்டில் தேடிச் சென்றார்கள்.

வயதானாலும், உடல் எல்லாம் அம்பு தைத்த நோவினாலும், எல்லாம் போயிற்றே என்ற நெஞ்சைப் பிளக்கும் துன்ப உணர்வினாலும், உயிர்ப்பு அடங்கி, கண் பார்வை மங்கி, மயக்க சிந்தையில் இருந்த ஜாம்பவானை இருவரும் கண்டார்கள். யாரோ தன்னை நெருங்கி வருவதை உணர்ந்த ஜாம்பவான், வருவது யார்? விபீஷணனா? என்னை ஆட்கொள்ளும் இராமனா? அல்லது அனுமனா? என் துன்பம் நீக்கி அருள வந்த தேவரோ? என்று எண்ணினான். வீழ்ந்து கிடக்கும் ஜாம்பவானைக் கண்டதும் விபீஷணன் "உய்ந்தனம்! உய்ந்தனம்!" என்று உற்சாகமாகக் கத்தினான்.

குரல் கேட்டு வந்தவன் விபீஷணன் என்பதை ஜாம்பவான் உணர்ந்தான். அவன் அருகே வந்திருப்பவன் யார்? என்று ஜாம்பவான் வினவ, 'வாழிய கொற்றவ! அனுமன் நின்றேன், தொழுதனன்!" என்றான் அனுமன். அனுமனுடைய குரலைக் கேட்ட ஜாம்பவான் எழுந்து, "ஐய! நாம் இறக்கவில்லை, எழுந்தோம், எழுந்தோம்" என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தான். அனைவரையும் பிழைக்க வைக்கும் ஆற்றல் அனுமனுக்குத்தான் உண்டு. அவன் இதோ இருக்கிறான். இனி அனைவரும் பிழைத்தோம் என்றான்.

இராமனது நிலையை ஜாம்பவான் கேட்டுத் தெரிந்து கொள்கிறான். இராமனும் இலக்குவனும் தெய்வநிலையில் ஒருவரே. இலக்குவன் இல்லாமல் இராமன் இருப்பானா? இந்தத் துன்பநிலை மாறுவதற்கு நீ இப்போதே போய் மருந்து கொணர்வாயாக!" என்றான் ஜாம்பவான்.

"அனுமனே! நீ சென்று அந்த மருந்தைக் கொண்டு வந்தால் எழுபது வெள்ள வானர சேனையும், இராமனும், இளைய கோவும் உன்னால் வாழ்வார்கள், மைந்த! கடிது போதி! என்றான். அந்த மலைக்குப் போகும் வழியைச் சொல்கிறேன் கேள்! இவ்வாறு சொல்லி போகும் வழியை விவரித்துச் சொல்லுகிறான். இந்த மருந்துகள் நான்கு விதமாகப் பயன்படுவன. அவை, மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்று; உடல் வேறு வகிர்கள் ஆகக் கீண்டாலும் பொருந்துவிக்கும் மருந்து ஒன்று; உடலில் பதிந்த படைக்கலன்களை வெளிக் கொணரும் மருந்து ஒன்று; மீண்டும் தன் முந்தைய உருவையே கொடுக்கும் மருந்து ஒன்று. இப்படி இந்த மருந்துகளைக் காவல் செய்யும் தெய்வங்கள் பல உண்டு. அவர்கள் யாரிடமும் இரக்கம் கொள்ளார். இவற்றை நீ எப்படியேனும் இங்கு கொணர்வாயாக! என்கிறான் ஜாம்பவான்.

"இங்கு இதுதான் என் பணி என்றால், இறந்தோரும் பிறந்தாரே! என்று சொல்லித் தனது பேருருவை எடுத்துக் கொண்டு, பூமியில் உந்தி எழுந்து வான் முகட்டை அடைந்தான். முன்பு இலங்கைக்குக் கடலைக் கடந்தத் போல அனுமன் வானத்தில் விரைந்து சென்றான். இமயப் பெருமலையை அடைந்தான். அதனைக் கடந்து உமை அம்மையுடன் சிவன் வாழும் கயிலை, அதனை கரம் குவித்து வணங்கி, பிறகு ஏமகூட மலையையும் நிடத மலையையும் கடந்து செல்கிறான். இவற்றையெல்லாம் கடந்து மேரு மலையை அடைகிறான். அங்கிருந்து வழியில் தேவர்கள் பலரைக் கண்டு வணங்கி வழிபட்டு, ஆசிபெற்று உத்தரகுரு நாட்டை அடைகிறான். அங்கு நீலமலையைக் கண்டு அதையடுத்து உள்ள சஞ்ஜீவி மலையைச் சென்றடைந்தான். அங்கு மருந்துகளைக் காக்கும் தெய்வங்கள் "யார் நீ?" இங்கு வந்த காரணம் என்ன? என்று கேட்க, அனுமன் தான் வந்த காரணத்தைக் கூறுகிறான்.

அதற்கு அந்த தெய்வங்கள் அனுமனை "ஐய! வேண்டியதை எடுத்துக் கொண்டு விரும்பியதை செய்து முடித்தபின், இம்மருந்து கெடாதபடி திரும்பக் கொண்டு வந்து எம்மிடம் தருக!" எனச் சொன்னார்கள். அனுமனும் இங்கு நின்று இன்ன மருந்து யோசித்துக் கொண்டிருந்தால் காலம் விரைந்து ஓடிவிடும் என்று அந்த சஞ்ஜீவி மலையை வேரோடும் பெயர்த்து எடுத்துத் தன் அங்கையில் தாங்கிக்கொண்டான். பின்னர் விண்ணிடை கடிந்து போனான்.

ஆயிரம் யோசனை அகன்று உயர்ந்து, ஆயிரம் யோசனை சுற்றுச் சூழ்ந்த அம்மலையை 'ஏ' எனும் மாத்திரத்தில் ஒரு கையில் ஏந்திக் கொண்டான். தாய்போன்றவனும், உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியானுமான அனுமன். இப்படி அனுமன் மருந்துகள் கொண்ட சஞ்ஜீவி மலையை எடுத்துக் கொண்டு வரும் வேளையில், இலங்கை போர்க்களத்தில் விபீஷணனும், ஜாம்பவானும், நினைவிழந்த இராமனின் காலை வருடிக்கொண்டிருக்கின்றனர். இராமபிரானின் தாமரை மலர்கள் போன்ற கண்கள் மலர்கின்றன. ஜாம்பவானும், விபீஷணனும் அருகில் அமர்ந்து, தன் காலை வருடிக் கொண்டிருந்ததைப் பார்த்து, "விபீஷணா! யான் ஏவியபடி உணவு கொண்டு வரும் காரியத்துக்காக போயிருந்தாயல்லவா? அதனால் நீ பிரம்மாஸ்திரத்திலிருந்து தப்பித்தாய்" என்றான். ஜாம்பவானைப் பார்த்து, "நீ உயிர் வரப் பெற்றாயோ?" என்று கேட்டான்.

"ஐயன்மீர்! இது நமக்கு நேர்ந்த அழிவேயாதலின், இதில் நாம் செய்யக்கூடியது எதுவும் இல்லை. உயிர் நீங்கியவர்கள் மீண்டும் பிழைக்க வழியில்லை. அறிவுமிக்க பெரியோர்களே! இனி நாம் என்ன செய்யலாம் என்பதைச் சொல்லுங்கள்" என்கிறான் இராமன். "சீதை பொன் மான் வேண்டும் என்று கேட்கப் போய் எல்லோர்க்கும் எவ்வளவு தீங்கு செய்து விட்டேன். பெண் சொல் கேட்ட பேதையாய் ஆனேனே!. அந்த இராவணனைக் கொல்லாமல் விட்டு போருக்கு மறுநாள் வரச்சொன்னேனே, இந்த தீவினையை அனுபவிக்கவோ அப்படிச் செய்தேன். பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று இலக்குவனைத் தடுத்தேனே. இப்போது அவனை அந்த அஸ்திரத்தாலேயே வீழ்த்தி விட்டானே. இந்த நேரத்தில் நான் இலக்குவன்கூட இல்லாமல் போனேனே. இலக்குவன் போய் நான் மட்டும் இருந்து என்ன பயன், நானும் மாண்டு போவேன். எம்பியை இழந்தபின் நான் வேறு எதுவும் வேண்டேன்" என்றான் இராமன்.

"இளையவன் இறந்த பின், எவரும் என் எனக்கு
அளவு அறு சீர்த்தி என்? அறம் என்? ஆண்மை என்?
கிளை உறு சுற்றம் என்? அரசு என்? கேண்மை என்?
விளைவுதான் என்? மறை விதி என்? மெய்ம்மை என்?"

நானும் இறப்பேன் என்று இராமன் சொன்னதும், ஜாம்பவான், நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன், என்று ஆரம்பித்தான். "இராமா! உன்னை நீ உணராமல் இருக்கிறாய். அடியேன் உன்னை முன்னமே அறிவேன். அதைச் சொல்லுதல் சரியல்ல. தேவர்களின் எண்ணத்துக்கு மாறானதாகும். பின்னர் அதை நீயே தெரிந்து கொள்வாய்! அனுமனை சஞ்ஜீவி மருந்து கொணர அனுப்பியுள்ளேன், அவன் வந்தால் நம் துயர் யாவும் தீரும். அவன் மருந்து கொண்டு வருவது திண்ணம்." என்றான்.

ஜாம்பவான் சொன்னதை இராமன் ஏற்றுக் கொண்ட அதே நேரம் வடக்கு திசையில் ஒலியொன்று கேட்கிறது. சண்டமாருதக் காற்று வீசுகிறது. விண்மீன்கள் நிலைகுலைகின்றன. அனுமன் ஆர்த்து எழுப்புகின்ற குரல் எல்லா திசைகளிலும் கேட்டு எதிரொலிக்கிறது. கடல் குமுறுகிறது. வடகோடியில் வானத்தில் கருடன் பறந்து வருவது போல அனுமன் விரைந்து வந்து கொண்டிருந்தான்.

"வந்து தோன்றினான்" என்று சொல்லும் முன்னதாக தாழப் பறந்து வந்து மெல்ல நிலத்தில் காலடி வைத்தான். சஞ்ஜீவி மலை அரக்கர்களின் ஊருக்குள் வர அஞ்சியதால், அதை வானத்தில் தனியே நிற்கவைத்து விட்டு அவன் மட்டும் கீழே வந்து இறங்கினான். சஞ்ஜீவி மலையின் காற்று அசைந்து வந்து படவும், போர்க் களத்தில் மாண்டு கிடந்தவர் அனைவரும் உயிர் பெற்று, நல்ல உடல் பெற்று, பெருவலிமையோடு தூங்கியவர் எழுந்தது போல எழுந்தனர். முன்னதாக அரக்கர் உடல்கள் அனைத்தையும் இராவணனது ஆணைப்படி கடலில் வீசப்பட்டுவிட்டதால், அரக்கர் பிணங்கள் மீண்டும் உயிர் பெறும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

என்ன அதிசயம்! சஞ்ஜீவி மலையின் காற்று பட்டதும் பட்ட மரங்கள் துளிர்த்தன; குரங்கினம் முழுவதும் உயிர் பெற்று எழுந்தது. இலக்குவன் உணர்வு பெற்று எழுந்தான். இராமபிரான் இலக்குவனைத் தழுவிக் கொண்டு அன்பு மிக ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார். எங்கெங்கும் ஒரே மகிழ்ச்சி ஆரவாரம் கேட்டது. என்ன அதிசயக் காட்சி, உலகமே வியந்தது.

"அரம்பையர் ஆடினர்; அமிழ்ந்த ஏழிசை
நரம்பியல் கின்னரம் முதல நன்மையே
நிரம்பின; உலகு எலாம் உவகை நெய்விழாப்
பரம்பின; முனிவரும் வேதம் பாடினார்".

"வேதம் நின்று ஆர்த்தன; வேத வேதியர்
போதம் நின்று ஆர்த்தன; புகழும் ஆர்த்தன; போதம் = அறிவு.
ஓதம் நின்று ஆர்த்தன; ஓத வேலையின் ஓதம் = கடல்.
சீதம் நின்று ஆர்த்தன; தேவர் சிந்தனை". சீதம் = குளிர்

இந்திரஜித் ஏவிய பிரம்மாஸ்திரம் இராமன் முன்பு வந்து நின்று, "என்னை வில்லில் பூட்டி செலுத்திய பின் யான் கொல்லுதல் உறுதி" என்ற உண்மையை நீ நிலை நிறுத்திவிட்டாய்!" அதாவது, பிரம்மாஸ்திரத்தை மாற்ற நாராயணாஸ்திரத்தை இராமன் (மகாவிஷ்ணு) பயன் படுத்தியிருந்தால், பிரம்மாஸ்திரம் சக்தி இழந்து போயிருக்கும். அப்படியில்லாமல் இலக்குவனை இறக்கவிட்டு, பிரம்மாஸ்திரத்தின் புனிதத்தை இராமன் காப்பாற்றிவிட்டான் என்கிறது அது.

சஞ்ஜீவி மலையைக் கொண்டு வந்து அனைவரையும் உயிர்பெற்று எழச் செய்து நம்பிக்கையூட்டிய அனுமனை இராமன் தழுவிக் கொண்டு, கண்களில் நீர் ததும்ப அவனை வாழ்த்தினான். அனுமன் ஒன்றும் பேசாமல் அடக்கத்தோடு இராமனை வணங்கினான். அனவரும் அனுமனைச் சூழ்ந்துகொண்டு வாழ்த்துகிறார்கள். ஜாம்பவான் அனுமனைப் பார்த்த், சஞ்ஜீவி மலையை சிறிதும் தாமதிக்காமல் அதை எடுத்த இடத்திலேயே கொண்டு போய் வைத்துவிட்டு வா என்று சொல்கிறான். அனுமனும் 'இதோ' என்று ஓர் நாழிகையில் மீள்வேன் என்று சொல்லி மீண்டும் பறந்து சென்று, சஞ்ஜீவி மலையை அதன் உரிய இடத்தில் கொண்டு போய் வைத்துவிட்டு, அதனைக் காக்கும் தெய்வங்களிடமும் சொல்லிவிட்டு திரும்ப வந்தான்.

இந்திரஜித் ஏவிய பிரம்மாஸ்திரத்தால் இராம லக்ஷ்மணர் தன் சேனையுடன் மாண்டார்கள் என்ற செய்தி கேட்டு, இராவணன் வெற்றி விழா கொண்டாடினான். அரக்கர்களும், அரக்கப் பெண்டிரும் கள் உண்டு ஆடுகிறார்கள். அரம்பையர், வித்யாதரர், நாகர், இயக்கர், சித்தர் என அனைவரும் வந்து மகிழ்ந்து ஆடிப்பாடி இன்புறுகிறார்கள். அப்போது ஒற்றர்கள் வந்து பகைவர்கள் உயிர் பெற்று எழுந்து விட்டார்கள் என்ற செய்தியை கொண்டு வந்தார்கள். இராவணன் கொதிக்கின்ற மனத்தினனாய் ஆலோசனை மண்டபம் அடைகிறான்.

இராவணன் மந்திராலோசனை மண்டபம் சென்ற செய்தி கேட்டு இந்திரஜித்தும், மகோதரன், மாலியவான் மற்றும் அமைச்சர்கள் வந்து கூடினர். இராவணன் தமக்கு நேர்ந்துள்ள துன்ப நிலையை எடுத்துரைத்தான். அதுகேட்டு மாலியவான் சொல்கிறான், "அவசரப்பட்டு அரக்கர்களுடைய பிணங்களையெல்லாம் எடுத்துக் கடலில் போடாமல் இருந்திருந்தால், அரக்கர்களும் பிழைத்து எழுந்திருப்பர்கள். அவசரப்பட்டு விட்டோம். பிரம்மாஸ்திரமே வீணான பிறகு நாம் அழிவது நிச்சயமாகி விட்டது. அந்த இராமன் பரம்பொருளே! அவனை வெல்லும் ஆற்றல் அரக்கருக்கு உண்டோ? சீதையை அவர்களிடம் கொண்டுவிட்ட பின் சரண் அடைந்தால், பிழைப்போம்" என்றான்.

"நன்று! நன்று!" என்று இராவணன் வெகுண்டு சொன்னான். "அரக்கர் அனைவரும் அழிந்து பட்டாலும், நான் ஒருவன் மட்டும் வாள் எடுத்துப் போர் புரிவேன்" என்கிறான் இராவணன். "மகனாகட்டும்! மற்றவர்களாகட்டும், பயம் கொண்டவர்கள் ஓடிவிடுங்கள். எதிரிகளை நானே அழிப்பேன்" என்றான்.

இந்திரஜித் எழுந்து தான் நிகும்பலை யாகம் செய்தால் வெற்றி பெறலாம். அதை விபீஷணன் இராமனிடம் சொல்லிக் கெடுக்காமல் இருக்க வேண்டும். அதற்கு என்ன உபாயம் என்று சிந்திக்கிறான். இந்திரஜித் சொல்லுகிறான், "சீதை போன்ற உருவம் செய்து அவலை அனுமன் முன்பு கொண்டு போய் கொன்றுவிட்டு, அயோத்திக்குச் சென்று அங்குள்லவர்களைக் கொல்வேன்" என்று வடக்கே போகிறேன். இராம லக்ஷ்மணரும் படையுடன் ஊருக்குத் திரும்புவார்கள். நான் சென்று நிகும்பலை யாகம் செய்து முடிக்கிறேன்" என்றான். இந்திரஜித்தின் யோசனையை இராவணனும் ஏற்றுக் கொண்டான்.

இந்திரஜித் சொன்னபடி, சஞ்ஜீவி மலையைக் கொண்டு போய் அதன் உரிய இடத்தில் சேர்த்துவிட்டு வான்வெளி மார்க்கமாக வந்து கொண்டிருக்கும் அனுமன் முன்பாக சீதையைப் போன்ற ஓரு மாயவடிவம் எடுத்த உருவத்தைக் கொல்கிறான். அனுமன் அது கண்டு அழுது புரண்டு, இராமனிடம் ஓடிப்போய் சொல்ல, அவர்கள் அயோத்தி சென்று அங்குள்ளவர்களையாவது காப்பேன் என்று புறப்படுகிறான். அப்போது விபீஷணன் "இது அரக்கர்களின் மாயையாகத்தான் இருக்க வேண்டும். இப்படி உங்களை திசை திருப்பிவிட்டு, இந்திரஜித் நிகும்பலை யாகம் செய்யப் போயிருக்கலாம். அப்படி அவன் அந்த யாகத்தைச் செய்து முடித்து விட்டால், அவனை வெல்வது என்பது இயலாது" என்றான்.

"நான் போய் ஒரு சிறு வண்டு உருவம் எடுத்துக் கொண்டு அசோக வனம் சென்று அன்னை நலமாக இருக்கிறார்களா என்று பார்த்து வருகிறேன்" என்று சொல்லி, அதன்படியே போய்ப் பார்த்துவிட்டு அங்கு அன்னை நலமாக இருப்பதை வந்து தெரிவிக்கிறான். அனைவருக்கும் மன நிம்மதி ஏற்படுகிறது. சீதை நலமாக இருக்கிறாள், அவளைக் கொல்வது போல மாயையால் நம்மை இந்திரஜித் ஏமாற்றிவிட்டு நிகும்பலையில் யாகம் செய்யப் போய்விட்டான் என்று இராமன் தெரிந்து கொண்டு, இந்திரஜித் செய்யப் போகிற நிகும்பலை யாகத்தை உடனே தடுக்க வேண்டும், அதற்கு வேண்டியதைச் செய்வோம் என்று அனைவரும் முடிவு செய்தார்கள்.

நிகும்பலை என்பது இலங்கையின் மேற்குப் பகுதியிலுள்ல ஒரு குகை. அங்கு பத்ரகாளி கோயில் ஒன்று உண்டு. அங்கு சென்று காளிக்கு யாகம் செய்தால் நினைத்ததைப் பெறலாம். இந்த நிகும்பலை பற்றிய தகவல் "வாசஸ்பதிய நிகண்டு" எனும் நூலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இராமன் விபீஷணனை நோக்கி, "ஐயனே! நீ துணை இருக்கிறாய். தெய்வம் உளது. அனுமன் இருக்கிறான். நான் துன்பம் தீர்வது பெரிய காரியமோ? என்றான்.

அதற்கு விபீஷணன், "இந்திரஜித் யாகத்தை முடித்துவிட்டால், அவனை யாராலும் வெல்ல முடியாது. நான் இலக்குவனோடு நிகும்பலை சென்று யாகத்தை அழித்து, அவனையும் கொன்று வருகிறேன். விடை தருக!" என்றான்.

உடனே இராமன் இலக்குவனை அழைத்து, விபீஷணனோடு சென்று அந்த யாகத்தை அழித்து இந்திரஜித்தையும் கொன்று வருக. அறவழியில் போர் செய்து அவனைக் கொல்க, என்று சொல்லி அவனைத் தழுவிக் கொண்டான்.

விபீஷணனுடன் இலக்குவன் நிகும்பலை சென்றடைகிறான். அங்கு ஆரவாரம் எதுவுமின்றி யாகம் நடப்பதையும், அந்த யாகத்துக்குக் காவலாக அரக்கர்கள் சக்கர வியூகமாக நின்று கொண்டிருப்பதையும் காண்கிறார்கள். விபீஷணன் இலக்குவனிடம், நாம் இப்போதே சென்று யாகத்தைச் சிதைப்போம் என்கிறான். இலக்குவன் உடனே தாக்குதலைத் தொடங்கி அரக்கர்களைக் கொன்று யாகத்தைச் சிதைத்துக் கெடுக்கிறான். இலக்குவனால் கொலையுண்ட அரக்கர் படையை இந்திரஜித் பார்க்கிறான். அங்கு கடுமையான போர் மூள்கிறது. அனுமன் போரிட்டு சோர்ந்து போகிறான். அங்கதன் பொருத வந்தான், அவனை விலக்கிவிட்டு இலக்குவனைத் தேடிப் போனான். வானர வீரர்களை வழி நெடுக துவம்சம் செய்து கொண்டே போகிறான்.

அப்போது விபீஷணன் இலக்குவனிடம், " அவன் அப்படியே தப்பி ஓடிவிடுவான், அவனை விடாதே!" என்றான்.

இலக்குவன் அனுமனுடைய தோள் மீது ஏறிக்கொண்டு போருக்கு வந்தான். இருவருக்கும் கடும் போர் நடந்தது. அப்போது விபீஷணன் இலக்குவனிடம், "இந்திரஜித் சோர்ந்து போய்விட்டான், இனி இவன் பிழைக்கமாட்டான்" என்றான். தான் சோர்ந்து போவது அறிந்தும், இலக்குவனோடு தொடர்ந்து போரிடுவது சாத்தியமில்லை என்பதும் அறிந்து இந்திரஜித், "இந்தா, ஒழிந்து போ!" என்று சொல்லி மறுபடியும் பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அதே சமயம் இலக்குவனும் பிரம்மாஸ்திரத்தை எடுத்து, இதனால் உலகுக்கு ஒரு கேடும் நேராமல் போகட்டும், இந்திரஜித்தை விட்டுவிட்டு அவன் அஸ்திரத்தை மட்டும் அழிக்கட்டும் என்று வேண்டிக் கொண்டு செலுத்தினான்.

பகைமையிலும் பண்பு பாராட்டிய இலக்குவனை தேவர்கள் வாயாறப் புகழ்ந்தார்கள். இந்திரஜித் விட்ட பிரம்மாஸ்திரம் இலக்குவனுடைய அஸ்திர பலத்தால் அழிந்து வீழ்ந்தது. அதனால் ஏற்பட்ட வெப்பத்தை வேறொரு பாணத்தால் இலக்குவன் தணித்தான். கோபமடைந்த இந்திரஜித் இலக்குவன் மீது பாசுபதாஸ்திரத்தை ஏவி விடுகிறான். வானரக்கூட்டம் செய்வதறியாது இலக்குவனை பயத்தோடு பார்க்கின்றனர். அவன் சிரித்துக் கொண்டே, ஓர் கணையை ஏவி அந்த பாசுபதாஸ்திரத்தை விழுங்கச் செய்து விட்டான்.

இதற்கெல்லாம் இந்த விபீஷணனே காரணம் என்று இந்திரஜித்துக்குக் கோபம் வந்தது. உடனே அவன் கழுத்துக்கு குறி வைத்து ஒரு வலிய அம்பைச் செலுத்தினான் இந்திரஜித். அந்த அம்பு சீறிக்கொண்டு வரும்போது, இலக்குவன் ஓர் வலிய அம்பால் அதனை உடைத்தெறிந்தான். இனி தொடர்ந்து இங்கு இருந்து போரிட்டால் ஆபத்து என்பதைத் தெரிந்து கொண்டு இந்திரஜித் அங்கிருந்து மறைந்து போனான். விண்ணில் எழுந்து மறைந்து போன இந்திரஜித் நேரே இராவணன் முன்பாகப் போய் நின்றான்.

"உன் தம்பி, விபீஷணன் உளவு சொல்லி இலக்குவன் நிகும்பலை யாகத்தை அழித்து விட்டான்" என்று நடந்த வரலாற்றைத் தந்தையிடம் சொல்லி கோபப்பட்டான் இந்திரஜித். இலக்குவனின் வீரத்தையும், தெய்வப் பண்பினையும் சொல்லிவிட்டு, "நீ சீதை மேல் வைத்த காதலை மறந்து விடு. அவர்கள் போர் செய்வதை விட்டுவிடுவார்கள்" என்று அறிவுரை கூறுகிறான்.

அதற்கு மான உணர்ச்சி பொங்க இராவணன் சொல்கிறான், "நான் ஒருவரையும் நம்பி இந்தச் செயலைச் செய்யவில்லை. என்னையே நோக்கி, யான் இந்நெடும்பகை தேடிக் கொண்டேன்" என்கிறான். இறப்பது யார்க்கும் உறுதி. ஆனால் புகழுக்கு அழிவு இல்லை. சீதையை நான் விட்டுவிட்டு மற்றவர்க்கு எளியனாய் ஆவதைக் காட்டிலும் நான் இறந்தாலும் உறுதியாய் இறப்பேன். நீ போ! நானே போருக்குப் போகிறேன்" என்றான் இராவணன்.

தந்தையின் கோபத்தைத் தணிக்க விரும்பிய இந்திரஜித், இராவணனிடம், "சீற்றம் தணிக! நான் சொன்ன சொல்லை பொருத்தருள்க! நானே போருக்குப் போகிறேன்" என்று கிளம்பிப் போனான். அங்கிருந்து நேரே இலக்குவன் இருக்குமிடம் சென்றான். அங்கு இவ்விருவருக்கும் கடுமையான போர் நடக்கிறது. சிவபெருமான் கொடுத்த வில்லும், தேரும் இருக்கும் வரை இராவணனை எவராலும் வெல்ல முடியாது என்று விபீஷணன் இலக்குவனிடம் கூறி, அவற்றை எப்படியாவது அழித்துவிடக் கோருகிறான்.

உடனே இலக்குவன், இந்திரஜித்துடைய தேரை அடித்து வீழ்த்துகிறான். வாளைக் கையில் ஏந்தி வானத்தில் ஏறி மறைகிறான் இந்திரஜித். இலக்குவன் ஒரு அம்பை எடுத்து எய்தி, அவனுடைய ஒரு கையோடு வாளையும் துண்டித்து வீழ்த்துகிறான். வலது கரம் துண்டிக்கப்பட்ட நிலையில் தனது இடக்கையால் ஒரு சூலத்தை எடுத்து இலக்குவன் மீது வீசுகிறான் இந்திரஜித். அப்போது இலக்குவன் வேதங்களைத் தெளிந்து கூறும் கடவுளும், அந்தணர்கள் வணங்கும் கடவுளும் இராமனே என்பது உண்மையானால், இந்திரஜித்தைக் கொல் என்று ஓர் கடிய கணையை ஏவினான்.

அந்தக் கணை இந்திரஜித்தின் கழுத்தைச் சீவிக்கொண்டு, தலை மேற்புறமாகவும், உடல் கீழேயும் விழுகின்றன. அறுந்த தலையை அங்கதன் தனது கைகளில் ஏந்த, அனுமன் தோள்மீது அமர்ந்தபடி இலக்குவன், இராமனிடம் செய்தியைச் சொல்ல விரைகிறான். தேவர்கள் இலக்குவனை பூமாரிப் பொழிந்து வாழ்த்த, இராமன் இலக்குவனை ஆரத் தழுவி அவன் காயங்களை ஆற்றுகிறார். இவ்வாறு மகா வீரனும், மாயத்தில் வல்லவனும், இராவணனுடைய கடைசி பலமுமாக இருந்தவனான இந்திரஜித் இறந்து போனான்.

போர்க்களத்தில் இந்திரஜித் மாண்டுபோன செய்தியை ஒற்றர்கள், இராவணனிடம் சென்று சொல்லுகிறார்கள். இதனைக் கேட்டு கோபமும் ஆத்திரமும் கொண்டு ஒற்றர்களைத் தன் வாளால் வெட்டிக் கொன்றான் இராவணன். போர்க்களம் சென்று மகனுடைய வெட்டுண்ட இந்திரஜித்தின் கையையும், உடலையும் கண்டு கதறி அழுகிறான். அவற்றைக் கொண்டு வந்து தைலத்தில் இட்டு வைக்க உத்தரவிடுகிறான். மகன் இறந்த செய்தி கேட்டு மண்டோதரி அழுது புலம்புகிறாள். மகன் உடல் மீது விழுந்து கதறுகிறாள். இலங்கையின் அரக்கர்கள் அத்தனை பேரும் இந்திரஜித்தின் மரணச் செய்திக்கு வருந்துகிறார்கள்.

இவ்வளவு துயரமும் சீதையினால் அன்றோ வந்தது; அவளைக் கொன்று விடுகிறேன் என்று வாள் எடுத்துக்கொண்டு புறப்பட்டான் இராவணன். அமைச்சன் மகோதரன் அவனைத் தடுத்துப் பெண்ணைக் கொல்லுதல் வீரர்க்கு அழகல்ல என்று தடுத்து விடுகிறான். அமைச்சனின் அறிவுரை கேட்டு சினம் தணிகிறான் இராவணன். பகைவர்களின் சிரங்களை கொண்டன்றி மீளேன் என்று வஞ்சினம் கூறிவிட்டு இராவணன் போர்க்களம் போகிறான்.

உலகின் பல பகுதிகளிலும் உள்ள அரக்கர் படைகளை இலங்கைக்கு வரவழைக்கிறான் இராவணன். அந்தப் படைகளைப் பார்வையிட ஒரு கோபுரத்தின் மீது ஏறி பார்க்கிறான். படையின் அளவு ஓராயிரம் வெள்ளம் என்று தெரிந்து கொள்கிறான். அந்தப் படைத் தலைவர்களை அழைத்துப் பேசுகிறான். தம்மை அழைத்ததின் காரணம் என்ன என்று அந்தப் படைத் தலைவர்கள் கேட்கிறார்கள். இராவனன் சீதை மீதுற்ற காதல் விவரங்களைக் கூறுகிறான். சிறு மனிதர் மீதும் குரங்குகள் மீதும் போரிடவா எங்களை அழைத்தீர்கள் என்று அந்த வீரர்கள் சிரிக்கிறார்கள்.

புஷ்கரத் தீவின் தலைவன் வன்னி என்பவன், "யார் அந்த மானுடர்?" என்கிறான். அவர்களுடைய வலிமை எத்தகையது? உடனே மாலியவான் எழுந்து, இராம லக்ஷ்மணர்களுடைய பெருமைகளையும், வானர வீரர்களின் வலிமையையும், விரித்துக் கூறி, சீதையை விட்டுவிடுதலே நல்லது என்று மறுபடியும் அறிவுரை நல்குகிறான்.

அதற்கு வன்னி, "சீதையை விடுவதென்றால் முன்னமே செய்திருக்க வேண்டும். இந்திரஜித் மாண்டுபோன பிறகு செய்வது தக்கதன்று" என்கிறான். இனி பகைவரை வெல்வது ஒன்றே வழி, எழுக! என்று சொல்லி அனைவரும் போருக்குப் புறப்பட்டனர்.

ஒரு நாட்டுக்கு இன்றியமையாத படைகளை மூலப்படை (மூலபலம்), கூலிப்படை, நாட்டுப் படை, காட்டுப் படை, துணைப்படை, பகைப்படை என ஆறு வகையாகச் சொல்வர். இவற்றில் மூலப்படையே, தொன்மையானது என்பதால் சிறப்புடையது. மூலப்படையினர் தாங்களே போர் புரியச் செல்வதாகக் கூறினார்கள். எனினும் இராவணன் தானே வானரப் படையை அழிப்பதாகவும், மூலப்படை இராமனையும் இலக்குவனையும் குறிவைத்துப் போரிட்டுக் கொல்லும்படியும் கேட்டுக் கொள்கிறான். படைகள் போருக்குப் புறப்பட்டன. நாலாபுறமும் சூழ்ந்து கொண்ட மூலப்படையைக் கண்டு வானரப்படை பயங்கொண்டு ஓடத்தொடங்கியது. நீலன் போய் அவர்களைத் தேற்றி அழைத்து வருகிறான். பயந்து ஓடியதற்கு ஜாம்பவான் அவமானப்படுகிறான்.

மூலப்படையைப் பற்றியும் அதன் வலிமை பற்றியும் விபீஷணன் இராமனுக்கு எடுத்துச் சொல்லுகிறான். அந்த மூலப்படையுடன் போரைத் தொடங்கிய இராமபிரான் தான் ஒருவனாகவே நின்று, அந்த மூலப்படையை நிர்மூலமாக்கி அழிக்கிறான். மற்ற வீரர்கள் வானரப் படைக்குக் காவலாகப் போயின. தேவர்களும், சிபெருமானும், பிரமனும் இந்த அதிசயப் போரைப் பார்க்கிறார்கள்.

இராமன் ஒருவனே பல்லாயிர இராமனாக பொருவது போன்ற தோற்றம் ஏற்பட்டது. போர்க்களம் முழுவதும் ஒவ்வொரு அரக்க வீரனுடனும் இராமன் போரிடுவது போன்ற தோற்றம் எதிரிகளை தள்ளாட வைத்தது. இராமனின் கைவில்லின் மணி ஒலிக்கும் போதெல்லாம் அரக்கர்கள் கூட்டம் கூட்டமாக இறந்து வீழ்ந்தனர். அப்படி அந்த மூலபல சேனை அனைத்தையும் அவன் ஒருவனே அழித்த காட்சியை உலகமே கண்டு வியந்தது.

நால்வகைப் படைகள் தன்னைச் சூழ்ந்து வர இராவணன் வானரப் படையுடன் போரிடுவதற்காக போர்க்களம் வருகிறான். தனது அரக்கர் படை அழிந்து வருவது பற்றி அவனுடைய மனம் பதறி, ஆத்திரம் கொள்ளுகிறான். இவனை இலக்குவன் எதிர்கொண்டு போரிடுகிறான். கடுமையாகப் போர் புரிந்து இலக்குவன் அரக்கர் படையை அழிக்கிறான். இவனை அம்பினால் வெல்லுதல் முடியாது என்று கருதி, இராவணன் வடிவம் இல்லாத மோகனக் கணையொன்றை இலக்குவன் மீது ஏவுகிறான். இதை கவனித்த விபீஷணன், அதை முறியடிக்க நாராயணன் கணையை விடும்படி இலக்குவனிடம் தூண்டுகிறான். அவ்வண்ணமே இலக்குவன் நாராயணக் கணையை ஏவி, மோகனக் கணையை செயலிழக்கச் செய்கிறான்.

எதிரிக்கு உளவு சொல்லும் தனது தம்பி விபீஷணன் மீது இராவணனுக்கு ஆத்த்ரம் வருகிறது. எதிரே இலக்குவனுக்கு அருகில் நிற்கும் விபீஷணன் மீது, மயன் தனக்கு அளித்த வேல் ஒன்றை எடுத்து வீசுகிறான். அந்த வேல் தன் உயிரை மாய்க்கப் போகிறது என்று விபீஷணன் சொல்ல, இலக்குவன் பல கணைகளை விட்டும், அவை பயனற்றுப் போயின. இலக்குவன் அந்த வேலைத் தன் மார்பில் வாங்க எண்ணியபோது அவனைத் தடுத்து, அனுமனும் சுக்ரீவனும் அங்கதனும், தங்கள் மார்பில் வாங்க முந்துகின்றனர்.

அவர்களையெல்லாம் விலக்கிவிட்டு இலக்குவன் தானே அந்த வேலைத் தன் மார்பில் வாங்கி கீழே விழுகிறான். விபீஷணன் அழுது புரள்கிறான், கதறுகிறான். தன் பொருட்டு இலக்குவன் இந்தச் செயலைச் செய்ததால், தானும் மாண்டு போக முனைகிறான். அப்போது ஜாம்பவான் தடுத்து, அனுமனை அனுப்பி முன்போலவே அந்த மருத்துமலை (சஞ்ஜீவி மலையை) கொணர்ந்து இலக்குவனை உயிர்ப்பிக்க வேண்டுகிறான். அனுமனும் இரண்டாவது முறை வடக்கே சென்று அந்த மருத்து மலையைக் கொணர்ந்து இலக்குவனை உயிர்ப்பிக்கிறான்.

பிறகு அனைவரும் இராமனிடம் சென்று நடந்த விவரங்களைக் கூறி இராவணனை உடனே கொல்ல வேண்டும் என்கின்றனர். இலக்குவன் வீழ்ந்ததும் வெற்றி பெற்றென் என்று சொல்லிக்கொண்டு இலங்கைக்குப் போய்விட்டான் இராவணன். அப்போது எதிரே வந்து இராவனனைத் தடுக்கிறான் விபீஷணன். அவனை, இந்தப் பசு என்ன செய்யும், என்று அலட்சியமாக ஒதுக்கிவிட்டு இராவணன் இலங்கைக்குப் போய்விட்டான்.

இராவனனின் மூலபலப் படையை இராமபிரான் தான் ஒருவனாகவே நின்று ஒழித்த பிறகு, சுக்ரீவன் இராமனிடம் சென்று வணங்கி, "அரக்கர்களுடைய இவ்வளவு பெரிய படையை வென்றது எவ்வாறு?" என்று கேட்கிறான். அதற்கு இராமன், போர்க்களத்திற்குப் போய் பார், எப்படி என்பது புரியும் என்றான். உடனே சுக்ரீவன், விபீஷணன் முதலியவர்களுடன் களம் சென்று பார்க்க, அங்கு வீழ்ந்து கிடக்கும் சேனைகளின் பெருக்கைக் கண்டு அஞ்சுகின்றனர். 'ஆயிரம் பருவம் கண்டாலும் இந்தக் களக்காட்சிக்கு ஓர் எல்லை கான்பது அரிது' இந்த சமுத்திரம் போன்ற படையை இராமன் வென்றது எவ்வாறு என்பதைப் புரிந்து கொள்வதும் அரிது என்று அனைவரும் திரும்பி இராமனிடம் வந்து சேர்கின்றனர்.

இதற்கிடையே, இலங்கை அரண்மனையில் .....

இராவனன் சீற்றத்துடன் தனது இருக்கையில் வீற்றிருக்கிறான். இலங்கையில் எஞ்சியுள்ள சேனைகளையும் போருக்குப் புறப்படுமாறு உத்தரவு பிறப்பிக்கிறான். நகரத்தில் முரசு அறைந்து அறிவிப்பு செய்யப்படுகிறது. பெரிய படையொன்று சேருகிறது. இராவணன் முறைப்படி சிவபூஜை செய்யப் போகிறான். வேத முறைப்படி சிறந்த தானங்களைக் கொடுக்கிறான். தும்பைபூ மாலையைச் சூடிக் கொள்கிறான். அம்புறாத் தூணியை எடுத்து மாட்டிக் கொள்கிறான்.

அரண்மனை வாயிலுக்கு வந்து, "கொண்டு வாருங்கள் தேரை" என்கிறான். தெய்வத் தன்மை வாய்ந்த தேர் ஒன்று அவன் அருகில் வந்து நிற்கிறது. தேருக்கு அர்ச்சனை முதலான வழிபாடுகளை நடத்தியபின், மறையவர்களுக்குப் பெரும் பொருளைத் தானமாக வழங்குகிறான். தேரின் மீது ஏறி போருக்குப் புறப்பட்டான். இன்றைய போரின் முடிவைக் கண்டு அழகிய கூந்தலையுடைய ஜானகி வருந்த வேண்டும்; இல்லையேல் மயன் மகளான மண்டோதரி வருந்த வேண்டும். இவ்விரண்டில் ஒன்று நிச்சயம் நடந்தே தீரும் என்று சொல்லிவிட்டுப் புறப்படுகிறான். வானரர்கள், இராமனிடம் சென்று இராவணன் போருக்குப் புறப்பட்டுவிட்ட செய்தியைச் சொல்லுகிறார்கள்.

இராவணன் தேர் ஏறி வெறியோடு போருக்கு வரும் செய்தியை விபீஷணன் தெரிவிக்க, வானர சேனை பயத்தால் நடுங்குகிறது. இராமபிரான் விரைந்து போர்க்கோலம் பூண்டான். சிவபெருமான் தேவர்களை அழைத்து, இந்த கொடிய போர் இன்று முடிவடைந்து விடும். வெற்றி பொருந்திய தேவலோகத் தேர் ஒன்றை இராமபிரானுக்கு அனுப்புக என்று கூறினார். இந்திரன் உடனே ஒரு தேரைத் தயார் செது மாதலி எனும் இந்திரனின் தேர்ப்பாகனிடம் கொடுத்து இராமனுக்குப் போர் செய்யப் பயன்படுபடி அனுப்பி வைக்கிறான்.

தேவர்கள் தேரை வணங்கி, 'எங்களுக்கு வெற்றியைக் கொணர்வாயாக!' என வனங்கி வழியனுப்பினர். மாதலியால் செலுத்தப்பட்ட அந்தத் தேர் இராமபிரான் முன்பாக வந்து நின்றதும், இராமன் திகைத்துப் போய் பார்த்தான்.

"இந்தத் தேரை யார் அனுப்பியது?" என்கிறான். மாதலி விவரங்களைக் கூறி தேரின் பெருமையையும் சிறப்பையும் விளக்கிக் கூறுகிறான். "முதல்வனே, தேவர்களும், சிவபெருமானும், பிரம்மதேவனும் முன்னின்று ஏவ, இந்திரனால் அனுப்பப்பட்ட தேர் இது" என்கிறான். இது அரக்கர்களின் மாயையோ என்று சந்தேகிக்கிறான் இராமபிரான். அப்போது அந்தத் தேரில் பூட்டப்பட்டிருந்த குதிரைகள், 'மாதலி கூறியவை மெய்ம்மை மொழிகளே!' என்று வேத மொழிகளால் உறுதி செய்தன.

இராமன் மாதலியிடம், "உன் பெயர் என்ன?" எனக் கேட்கிறான். "ஐயனே! இந்த வலிய தேரினை செலுத்தும் மாதலி" என்றான் அந்தத் தேர்ப்பாகன். அப்போது இராமன், அனுமனையும், இலக்குவனையும் நோக்கி உங்கள் கருத்து என்ன என்றான். அதற்கு அவர்கள், "ஐயனே! இதில் சந்தேகிக்க எதுவுமில்லை. இந்தத் தேர் இந்திரனுடையதே" என்றனர்.

உலகம் நற்கதி அடையவும், தீவினைகள் சிதைந்து அழியவும், நல்வினைகள் களிப்புற்று ஓங்கவும், துன்பத்துள் ஆழ்ந்துள்ள தேவரும், முனிவரும், இன்புற்று வாழவும், இராமபிரான் அந்தத் தேரின் மீது ஏறினார். தேவர்கள் "ஜெய விஜயீ பவ!" என வாழ்த்த, இராமபிரான் தேரேறி போருக்குப் புறப்பட, இராவணனும் தேரேறி இராமனை நோக்கி வருகிறான்.

இராமனது தேர், தேவர்கள் கொடுத்தது என்று அறிந்து சினத்தால் வாய்மடித்துப் பற்களைக் கடிக்கிறான் இராவணன். தனது தேரை இராமனை நோக்கி விரைந்து செலுத்தும்படி உத்தரவிட்டான். இருவரும் எதிர் எதிரே போர் செய்யக் காத்திருக்க, மகோதரன் இலக்குவனுடன் போர் புரிய போய்விடுகிறான். இடையில் இராமனுடன் பொருதி, இராம பாணத்திற்கு இரையாகிவிடுகிரான் மகோதரன். இராவணனுக்குப் பல தீய நிமித்தங்கள் தோன்றுகின்றன. எனினும் உள்ளத்து உறுதி குலையாமல் போர் செய்கிறான்.

போர் கடுமையடைகிறது. இராவணன் தனது தேரை வானத்தில் ஏற்றுகிறான். இராமனுடைய தேரும் விண்ணில் செல்கிறது. இருவரும் அங்கு போர் செய்கிறார்கள். தெய்வப் படைகளை ஒருவர் மேல் ஒருவர் ஏவி பயங்கரமாகப் போர் புரிகின்றனர். இராவணன் ஒரு கொடிய சூலத்தை இராமன் மீது வீசுகிறான், அதன் மீது கணை எதையும் தொடுக்காமல், தன் ஊங்காரத்தால் அதைப் பொடியாக்குகிறான் இராமன். இவன் நிச்சயம் மனிதனல்ல, பரம்பொருளே என்று இராவணன் உணர்ந்து கொண்டபோதும், வீம்பின் காரணமாக உறுதியோடு போர் செய்கிறான். அவ்வாறு போர் செய்கையில் இராமன் இராவணனுடைய தலையை அறுக்கிறான். அறுந்த தலை மீண்டும் முளைத்து வருகிறது. அறுக்க அறுக்க மீண்டும் மீண்டும் முளைக்கிறது.

இராமன் அவன் உடல் முழுவதையும் அம்புகளால் துளைத்தெடுக்கிறான். இராவணன் மூர்ச்சையடைந்து வீழ்கிறான். இராவணனது தேர்ப்பாகன், தனது தேரை அங்கிருந்து ஓட்டிக்கொண்டு விலகிச் சென்று விடுகிறான். மாதலி இப்போது அவனைக் கொன்று விடு என்கிறான் இராமபிரானிடம். உணர்வு இழந்தவனைக் கொல்வது அறச்செயலல்ல என்கிறான் இராமன். நினைவு திரும்பிய இராவணன், தான் போர்க்களத்தில் இல்லாதது கண்டு பாகனைக் கொல்லப் போனான். நிகழ்ந்ததைச் சொல்லி, தான் செய்தது போர் நெறிப்படி சரியே என்று விளக்குகிறான் தேரோட்டி. மறுபடி தேர் இராமனை நோக்கிப் போகிறது. அப்போது இராம இராவண யுத்தம் கடுமையாக நடக்கிறது.

அந்தப் போரின் உச்ச கட்டமாக, இராமபிரான் தனது வில்லில் பிரம்மாஸ்திரத்தைத் தொடுத்து, மந்திரம் சொல்லி இராவணன் மீது ஏவுகிறார், 'அக்கணத்தில் அயன்படை (பிரம்மாஸ்திரம்) ஆண்தகை சக்கரப்படையோடும் தழீஇச் என்று புக்கது, அக்கொடியோன் உரம்; பூமியும், திக்கு அனைத்தும், விசும்பும் திரியவே.' இராகவனின் புனித அம்பு இராவணன் நெஞ்சில் புகுந்து உயிரைக் குடித்துப் புறம் போயிற்று.

"முக்கோடி வாழ் நாளும், முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்னாள்
எக்கோடி யாராலும் வெலப்படாய், எனக் கொடுத்த வரமும், ஏனைத்
திக்கொடும் உலகனைத்தும் செருக்கடைந்து புயவலியும் நின்று, மார்பில்
புக்கோடி உயிர் பருகிப் புறம் போயிற்று, இராகவன் தன் புனித வாளி."

இராகவன் விட்ட அந்த அம்பு, இராவணனுடைய முக்கோடி வாழ்நாளையும், அவன் முயன்று செய்த தவ வலிமையையும், பிரமன் முன்பு அவனுக்குக் கொடுத்த எந்தத் திக்கிலும், எவராலும் வெலப்படாய் என்ற வரமும், எட்டுத் திக்கிலும் புகழ் பரந்த புய வலியையும் அழித்துவிட்டு, அவன் மார்பில் புகுந்து குடைந்து கொண்டு உயிரை உண்டு வெளிப்புறம் போய்விட்டது.

வானவர்கள் ஆர்ப்பரித்தார்கள். அந்தணரும், முனிவர்களும் ஆசி கூறினார்கள். இராமனுடைய அம்பு, பாற்கடல் சென்று மூழ்கி திரும்ப வந்து இராமபிரானின் அம்புப் புட்டிலில் வந்து சேர்ந்தது.

உயிரிழந்த இராவணன் உடல் தேரிலிருந்து தலைகீழாய் தரையில் விழுகிறது. உயிர் போன இராவணனது முகம் பொலிவுடன் விளங்கியது. ஏன் தெரியுமா? எப்போதும் கனன்றெழுந்த கோபம் அவன் உடலிலிருந்து போய்விட்டது. வஞ்சக நினைவுகளும், காம இச்சைகளும் மனத்திலிருந்து போய்விட்டன. வலிமை ஒடுங்கியது, அதனால் அவன் முகவும் பொலிவுடன் காணப்பட்டது.

இராமனுடைய தேர் வானத்தில் இருந்தது. சாரதியைத் தேரை கீழே இறக்கு என்று சொல்லும்போதே, கீழே கிடந்த இராவணனின் மேனியை முழுமையாகப் பார்த்தான். கிழே இறங்கி வந்து அருகில் நெருங்கி, இராவணன் உடலைப் பார்த்தான் இராமன். வானரங்களோ இறந்துபோன இராவணனின் உடலின் மீது ஏறி விளையாடுகின்றன. இராவணனது முதுகில் திசையானைகளின் கொம்புகள் குத்தித் தெரிந்த வடுக்களைப் பார்த்தான் இராமன். இது போரில் புறமுதுகிட்டதால் பட்ட வடுக்களோ என்று ஐயமுற்றான். இவன் முன்பு கார்த்தவீரியனால், கட்டுண்டு கிடந்தவன். இவனோடு போர் செய்கிறோமே என்று நினைத்தது உண்டு. அது தவிர இங்கு புறமுதுகிட்ட தழும்புகளும் அல்லவா இருக்கின்றன, என்று எண்ணி இராமன் விபீஷணனை அழைத்து, 'இந்த வெற்றி சிறப்புடையது அன்று' என்றான்.

விபீஷணன் மனம் வருந்திச் சொல்கிறான், "செல்வனே! நீ சொல்லும் சொற்கள் பொறுத்தமற்றவை. ஐயனே! கார்த்தவீரியனும், வாலியும் அரிதாகப் பெற்ற வெற்றி, தேவர்களின் சாபத்தால் விளைந்தவை. இராவணன் போர் செய்யும் விருப்பத்தால் உலகத்தில் எங்கெங்கோ போய் தேடியும் பகைவர் இல்லாமையால், பெரிய திசை யானைகளோடு பொருதினான். அவற்றின் கொம்புகள் மார்பில் குத்தி ஆழப் பதிந்து ஒடிந்தன. அந்த வடுக்களையே நீ முதுகில் பார்த்தாய். அன்றி, அது போர்க்கள வடுக்கள் அல்ல, பகைவரின் படைக்கலங்கள் அவனை என்ன செய்யும்? அந்தத் திசை யானைகளின் கொம்புகள் மார்புக்கு அணிகலன்களாக அங்கே பதிந்து கிடந்தன. முதல் நாள் போரில் அனுமன் அவன் மார்பில் விட்ட குத்தினால் அவை முதுகு வழியே வெளியேறின" என்றான்.

"தேவர்கள் எல்லாம் இவனுக்குப் பயந்து கிடந்தவர்கள். இவன் இன்று இறந்துவிட்டான் என்று சொன்னாலும், அவர்கள் நம்பாமல் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்" என்றான் விபீஷணன்.

அதற்கு இராமன், "அப்படியா?" என்று கேட்டுவிட்டு, இராமனும் தன் மனதில் தோன்றிய ஐயங்களும், வெட்கமும் நீக்கி, விபீஷணனை நோக்கி, "விபீஷணா! நீ இவனுக்கு ஈண்டு ஈமக்கடன்களைச் செய்வாயாக!" என்று பணித்தான்.

இறந்து கிடந்த அண்ணனின் உடலைக் கண்டு விபீஷணன், அதன் மேல் விழுந்து கதறுகிறான்.

"உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு, சனகி எனும் பெரு நஞ்சு உன்னைக்
கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர்!; நீயும் களப்பட்டாயே!
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனித்தான் எண்ணுதியோ? எண் இல் ஆற்றல்
அண்ணாவோ! அண்ணாவோ! அசுரர்கள்தம் பிரளயமே! அமரர் கூற்றே!"

சீதையை விட்டுவிடு, இவள்தான், முன்பு தீப்பாய்ந்த வேதவதி என்று சொன்னேனே, இவளால் உனக்கு மரணம் நேரும் என்று எச்சரித்தேனே, அதைக் கேட்காமல் உன் குலம் முழுவதும் இறந்துபடப் போனாயே! ஜானகி எனும் நஞ்சு உன்னைத் தன் கண்ணால் பார்த்த மாத்திரத்தில் உன் உயிர் போய்விட்டதே! அண்ணா! அண்ணா! நீ எங்கு போனாய்? பாட்டனாம் பிரமனுடைய நாட்டை அடைந்தாயோ? பிறைசூடிய சிவபிரான் தன் சிவலோகம் அடைந்தாயோ? எமனும் அஞ்சும் உன் உயிரைக் கவர்ந்து போனவர் எவரோ? கொல்லாத மைத்துனனைக் கொன்றாய் என்று தங்கை சூர்ப்பனகை உன்னை பழி தீர்த்தாளோ? சொர்க்கத்திலும், நரகத்திலும் அனைவருமே நம்மோடு பகைமை கொண்டார்; நீ போன இடத்தில் யார் முகத்தில் விழிப்பாய் நீ?"

"போர் மகளை, கலைமகளை, புகழ்மகளை தழுவிய கை, பொறாமை கூர
சீர்மகளை, திருமகளை, தேவர்க்கும் தெரிவரிய தெய்வக் கற்பின்
பேர்மகளை, தழுவுவான் உயிர் கொடுத்து பழி கொண்ட பித்தா! உன்னைப்
பார்மகளைத் தழுவினையோ, திசையானை பணை இறுத்த பணைத்த மார்பால்".

வீரத்திருமகள், கலைமகள், புகழ்மகள் போன்ற உனக்குரியவராக இருக்கும் மூன்று பெண்டிரைத் தழுவிய உன் கை, தெய்வக் கற்புடைய திருமகளின் அம்சமான புகழ்மிக்க சீதையைத் தழுவ ஆசைப்பட்டு உன் உயிரைக் கொடுத்து பழி கொண்ட பித்தனே! அஷ்ட திக் கஜங்களின் கொம்புகளை முறித்த உன் பருத்த மார்பினால் பூமிதேவியை தழுவிக் கொண்டாயோ? இவ்வாறு விபீஷணன் புலம்பி அழுகிறான். அவனை ஜாம்பவான் தேற்றி அழைத்துச் செல்கிறான்.

இராவணன் இறந்த செய்தியை மனைவி மண்டோதரியிடம் தெரிவிக்கிறார்கள். போர்க்களத்துக்கு ஓடி வருகிறாள். வந்து களத்தில் கணவன் உடல் கிடக்கும் இடம் வந்து அவ்வுடல் மீது விழுந்து அலறுகிறாள். அவளோடு கூட வந்த அரக்கர்குலப் பெண்கள் அழுது அரற்றுகிறார்கள். மண்டோதரி இறந்த கணவனின் உடலைப் பார்க்கிறாள். என்ன இது? இவன் உடம்பு முழுவதும் அம்பு துளைத்திருக்கிறதே.

"வெள் எருக்கஞ் சடைமுடியான் வெற்பு எடுத்த திருமேனி மேலும் கீழும்
எள் இருக்கும் இடமின்றி, உயிர் இருக்கும் இடன் நாடி, இழைத்தவாறோ?
கள் இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல்
உள் இருக்கும் எனக் கருதி, உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாள்?

வெள்ளெருக்கம்பூ மாலையை அணிந்த சிவபெருமானுடைய கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த உனது அழகிய உடம்பின் மேலும் கீழுமாக எள் இருப்பதற்குரிய சிறிய இடம்கூட இல்லாதபடி, உன் உயிர் இருக்கும் இடத்தைத் தேடித் துளைத்ததோ அன்றி, தேன் இருக்கும் மலரணிந்த சானகி மீதான காதலை உன் மனச் சிறையில் எங்காவது மறைத்து வைத்திருக்கிறாயோ என்று கருதி உன் உடல் முழுவதும் புகுந்து துளைத்ததோ இராமனுடைய வாளி? என்று இராவணன் உடல் மீது விழுந்து மண்டோதரி கதறுகிறாள்.

பெண்களுக்கு அணிபோன்ற ஜானகியின் அழகு, அவளுடைய கற்பு, அவள் மீது இராவணன் கொண்ட காதல், சூர்ப்பனகை இழந்த மூக்கு, தசரதன் ஏவலால் இராமன் காட்டிற்கு வந்தது, இவையெல்லாம் இந்திரனின் தவத்தால் வந்ததோ? இப்படிப் புலம்பி அழுது, ஏங்கிப் பின் எழுந்து, இராவணனது மார்பினைத் தன் தளிர் கரத்தால் தழுவிக் கொண்டு, 'ஓ'வென அழைத்துப் பெருமூச்சு விட்டாள். அவள் உயிர் மூச்சும் அதோடு அடங்கியது. கணவன் மறைந்தவுடன் தானும் உயிர் விட்ட மண்டோதரி எனும் கற்பரசியை மாதர் எல்லாம் போற்றி வாழ்த்தினர்.

இராவணனுடைய ஈமக் கடன்களை விபீஷணன் செய்து முடிக்கிறான். அனைத்துக் காரியங்களும் முடிந்த பிறகு, அனைவரும் இராமனிடம் வந்து சேருகின்றனர். இராமன் தன் தம்பி இலக்குவனை
அழைத்து, "நீ போய், சுக்ரீவன், அனுமன் மற்றும் வானர வீரர்களை அழைத்துக் கொண்டு, விபீஷணனுக்கு வேதமுறைப்படி இலங்கை அரசின் முடிசூட்டி பட்டாபிஷேகம் செய்து வருவாயாக" என்று பணித்தான். இதனைக் கேட்டு தேவர்கள் விபீஷணனின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்கின்றனர். இலக்குவன் அனைவர் முன்பாகவும், விபீஷணனுக்கு வேத கோஷங்கள் முழங்க, மங்கள ஸ்னானம் செய்வித்து, புத்தாடைகள் அணிந்து, முடிசூட்டி இலங்கைக்கு அரசனாக்கினான்.

இலங்கையின் அரசனாக முடிசூட்டிக் கொண்ட விபீஷணன், இலக்குவனை வணங்குகிறான். பிறகு இராமபிரான் இருக்குமிடம் சென்று அவரை வணங்கி ஆசி பெறுகிறான். இராமன் விபீஷணனைத் தழுவிக் கொண்டு ராஜ நீதிகள் பலவற்றை எடுத்துச் சொல்கிறார். பிறகு இராமன் அனுமனை அழைத்து சீதையைக் கண்டு செய்தி சொல்லி வருமாறு அனுப்புகிறான். மாருதியும் அங்ஙனமே சென்று சீதையை வணங்கி, ஆடியும், பாடியும் செய்தியைச் சொல்கிறான்

"ஏழை சோபனம்! ஏந்திழை சோபனம்,
வாழி சோபனம்! மங்கள சோபனம்,
ஆழி ஆன அரக்கனை ஆரியச்
சூழி யானை துகைத்தது, சோபனம்".

அனுமன் கொண்டு வந்த மங்களகரமான செய்தி கேட்டு சீதை உடல் பூரித்தாள். செய்தி கேட்ட களிப்பின் மிகுதியால், பிராட்டி ஒன்றும் பேசமுடியாமல் இருந்தாள்.

"அன்னையே! தாங்கள் ஒன்றும் பேசாதது ஏன்?" என்கிறான்.

"மாருதி! மகிழ்ச்சிப் பெருக்கினால், உனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை" என்கிறாள் சீதை. ஆஞ்சநேயா! நீ முன்பு வந்தபோது நீக்குவென் மொய்சிறை என்றாய். பின்னை நீக்கி உவகையும் பேசினை, என்ன பேற்றினை உனக்கு ஈவது. உன்னி உன்னி உரை மறந்து நின்றேன்" என்றாள்.

அனுமன் சீதையிடம், "அன்னையே! தங்களை வருத்திய இந்த அரக்கிகளைக் கொல்ல எனக்கு அனுமதி தருக!" என்று கேட்டான். உடனே அரக்கிகள் சீதையிடம், "அன்னையே! நீயே சரண்" என்று சரணடைந்து விட்டனர். சீதாதேவி அரக்கியர்களுக்கு அபயம் அளித்துக் காப்பாற்றி அனுமனிடம், "இவ்வரக்கியர் இராவணன் சொன்ன வண்ணம் செய்தார்கள். அவ்வளவே! வேறு என்ன தீங்கு செய்தார்கள்? இவர்களை ஒன்றும் செய்துவிடாதே! விட்டுவிடு!" என்றாள்.

பிராட்டியின் கருணை மனத்தை நினைத்து அனுமன் கண்கள் பனிக்க, அவளைப் பணிகிறான். இராமன் விபீஷணனை அனுப்பி சீதையை அணிகலன்களோடும் சீரோடும் அழைத்து வா என்று அனுப்பினான். விபீஷணன் உடனே வந்து சீதையை வணங்கி, "தாயே! தங்களை நல்ல ஆடை, அணிமணிகள், ஆபரணங்கள் அணிந்து அழைத்து வரப் பணித்தார் அண்ணல்" என்று கூறுகிறான். சீதாதேவி, "புதிய ஆடைகளும், அணிகலன்களும் இல்லாமல் நான் இங்கிருந்த கோலத்தில் வருவதே எனக்குத் தகுதி" என்று அவன் வேண்டுகோளை மறுத்து, தான் இருக்கும் விதமாகவே புறப்படத் தயாரானாள். அதற்கு விபீஷணன்,"அன்னையே, இது இராமபிரான் கட்டளையாயிற்றே" என்று சொல்லவும், சரியென்று சீதையும் சம்மதித்தாள். மேனகை, அரம்பை, ஊர்வசி, ஆகியோர் வந்து மஞ்சனமாட்டி, ஆபரணம் பூட்டி அன்னையை அலங்கரித்தார்கள்.

பிராட்டியை ஓர் விமானத்தில் ஏற்றி இராமபிரானிடம் அழைத்து வந்தனர். தேவியைப் பார்க்க தேவர்களும், முனிவர்களும், தேவலோக மகளிரும் முணியடித்து வந்து குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடியடி நடக்கிறது. கூச்சல் கேட்டு இராமன் விபீஷணனை கடிந்து கொள்கிறான். சாதுவான மக்களை ஏன் இப்படி அடித்து விரட்டுகிறாய்? அப்படிச் செய்யக்கூடாது என்கிறான்.

பிராட்டி இராமபிரானது திருமேனியைக் கண்டு தரிசிக்கிறாள். விமானத்திலிருந்து இறங்கி இராமனைத் தொழுதுவிட்டு, தன் ஏக்கம் நீங்கினாள். இராமபிரானும், கற்புக்கரசியும், பெண்மை குணங்களுக்கு இருப்பிடமானவளும், அழகுக்கு அழகானவளும், தன்னைப் பிரிந்த நிலையிலும் அருள் செய்யும் அறத்தை உடையவளுமான பிராட்டியை அன்பினால் உளம் பொருந்த நோக்கினான்.

"கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை,
பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை,
தற்பிரிந்து அருள்புரி தருமம் போலியை,
அற்பின் அத்தலைவனும் அமைய நோக்கினான்".

கண்கள் கண்ணீர் சோர, தன் காலடியில் விழுந்து வணங்கிய சீதையை அடுத்த கணம் அவளைப் பார்த்த பார்வையில், கருணை மறைந்து சீற்றம் தென்பட்டது. அந்தச் சீற்றம் கண்களில் மின்ன, இராமன் பேசுகிறான், "சீதா! நீ இராவணனது சிறையில் நெடுநாள் இருந்தாய். அங்கு உணவினை விரும்பி உண்டாய். ஒழுக்கம் பாழ்படவும், நீ மாண்டிலை. அச்சம் தீர்ந்து இவண் மீண்டது ஏன்? இராமன் விரும்புவான் என்று கருதியா?"

"உன்னை மீட்கவென்று நான் கடலில் அணை கட்டினேன். அரக்கர்களுடன் போராடினேன். இராவனனைக் கொன்றேன். மனைவியைக் கவர்ந்தவனோடு போரிட்டு அழிக்கவில்லை எனும் கெட்ட பெயர் எனக்குக் கிட்டிவிடாதவாறு இலங்கை வந்தேன். அங்கு, நீ இருந்த இடத்தில் மாமிசங்களை உண்டாயோ? மதுவினை அருந்தினாயோ? கணவனைப் பிரிந்த கவலை சிறிதுமின்றி இனிதாகக் காலம் கழித்தாயோ?"

"பெண்மையும், பிறப்பும், பெருமையும் கற்பு எனும்
திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், சீர்மையும்,
உண்மையும், நீ எனும் ஒருத்தி தோன்றலால்
வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால்".

"நான் உனக்கு என்ன சொல்ல இருக்கிறது? உன் நடத்தை என் உணர்வைச் சிதைக்கிறதே. நீ இறந்து போவாயாக! அங்ஙனமன்றாயின் என் எதிரே நில்லாமல் உனக்குத் தகுதியான இடத்துக்குச் செல்வாயாக!" என்று வெகுண்டு கூறினான், மெய் உணர்ந்தோர் உள்லத்தில் வீற்றிருக்கும் இறைவனாகிய இராமன்.

இராமனின் இந்தச் சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் கதறி அழுதார்கள். தன் தன்மைக்கு ஒவ்வாத கடும் பழிச்சொற்களைக் கேட்கப் பொறாத உள்ளத்தினளாய், இரு கண்களிலிருதும் குருதியும் கண்ணீரும் கொட்ட, அவமானத்தால் தலை குனிது, நிலத்தினை நோக்கி நிற்கும் சீதை, புண்ணை அம்பினால் குத்திக் கிளறியது போல கடும் துன்பத்தால் பெருமூச்செறிந்தாள்.

இதுநாள் வரை பொறுமையோடு, எதிர்ப்பட்டத் துன்பங்களையெல்லாம் சகித்துக் கொண்டு காத்திருந்து, தவமியற்றி உயிர் வாழ்ந்தது இத்தகைய கடும் சொற்களைக் கேட்கத்தானா?

"மாருதி வந்து, எனக் கண்டு, "வள்லல் நீ
சாருதி ஈண்டு" எனச் சமையச் சொல்லினான்
யாரினும் மேன்மையான் இசைத்தது இல்லையோ?
சோரும் என் நிலை? அவன் தூதும் அல்லானோ?"

"முன்பு அனுமன் அசோகவனம் வந்து நின்னுடைய தூதன் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு, என்னைப் பிரிந்த உன் நிலையையும், பகைவனை வென்று என்னை மீட்பதற்காக நீ விரைவில் இங்கு வருவாய் என்பதனையும் கூறிச் சென்றதனால், நான் இதுகாறும் உயிர் தரித்திருந்தேன். நினது பேரன்பினை எனக்கு எடுத்துரைத்த அனுமன், அதுபோலவே, நின்னைப் பிரிந்து வருந்தும் என் நிலைமையையும் நினக்கு உள்ளவாறு சொல்லியிருக்க வேண்டுமே? அனுமன் வாயிலாக நீ உண்மையை உணரவில்லை என்றால், அந்த அனுமன் நீ அனுப்பிய தூதனே இல்லை போலும்" என்று பிராட்டி இராமனை வினவுகிறாள்.

"இவ்வளவு நாளும் நான் காத்த தவம், நற்குண நற்செய்கைகள், எத்துணைச் சிறந்த கற்பினையும் நீ உணரப் பெறாமையால், பித்தர் செயல் எனும்படி அவை யாவும் பயனின்றி கழிந்து போயின".

"ஆதலின், புறத்து இனி யாருக்காக என்
கோது அறு தவத்தினைக் கூறிக் காட்டுகேன்,
சாதலின் சிறந்தது ஒன்றிலை; தக்கதே'
வேத! நின் பணி; அது விதியும்' என்றனள்."

சீதாபிராட்டி இலக்குவனை அழைத்து, இராமன் இப்படிக் கூறிவிட்ட நிலையில் தான் உயிர் வாழ விரும்பவில்லை, தீமூட்டி அதில் இறங்கி உயிரை விடுவேன் என்று தீ மூட்டச் சொல்கிறாள். இலக்குவன் மூட்டிய தீ பற்றி எரிகிறது. சீதாதேவி, அதன் அருகில் செல்கிறாள். உலகில் எல்லா உயிர்களும் அஞ்சி நடுநடுங்குகின்றன. இந்திராணி உள்ளிட்ட தேவ மாதர்கள் கதறுகிறார்கள். நான்முகன் முதலான நாயகர் நடுங்கினர். ஆதிசேடன் படம் சுருங்கி ஒடுங்கினான்; அவன் வாயிலிருந்து நஞ்சு ஏங்கும் பரவியது, கடல்கள் பொங்கின.

தீயின் முன்பாக நின்ற பிராட்டி, தீயினை நோக்கி, "அக்னி தேவா! யான் மனத்தாலும், மொழியாலும், உடலாலும், குற்றமுடையேன் என்றால், என்னை நீ உன் கொடிய நாவால் சுட்டெரிப்பாயாக!" என்று கூறிக் கொண்டே இராமபிரானையும் வணங்கி, கூப்பிய கரங்களோடு, அன்னை, அந்த அக்னியுள் விரைந்து பாய்ந்தாள். அன்னை அப்படிப் பாயவும், பாலின் நுரை போல தீய்ந்தது அந்த நெருப்பு. அவள் கற்பு எனும் தீயின் வெப்பம் தாங்காமல்!.

தீக்குழிக்குள் அழுந்திய சீதாபிராட்டியை ஏந்திய கையனாய் வெளியே வந்தான் அக்னி தேவன். இராமபிரனை நோக்கிக் கதறி அழுத வண்ணம் வந்து இராமனைப் பணிந்து சீதையைக் கொண்டு சேர்க்கிறான்.

கற்பின் செல்வியாம் சீதாபிராட்டியை இராமன் வெகுண்டு கூறிய சொற்கள், அவளது கற்பின் சிறப்பினை உலகத்தார் உணர வேண்டி பேசிய சொற்கள் என்ற கருத்தில் கவிச்சக்கரவர்த்தி இராமனை வர்ணிக்கும்போது "ஊடின சீற்றத்தால்" எனும் சொற்றொடரால் குறிக்கிறான்.

"ஊடின சீற்றத்தால் உதித்த வேர்களும்
வாடின இல்லையால்; உணர்த்துமாறு உண்டோ
பாடிய வண்டொடும்; பணித்த தேனொடும்
சூடின மலர்கள் நீர் தோய்ந்த போன்றவால்".

கற்பின் தெய்வமான சீதாபிராட்டியை நோக்கி இராமன் வெகுண்டு கூறிய சொற்கள், அவளது கற்பின் சிறப்பினை இந்த உலகத்தார் உள்ளவாறு அறிதல் வேண்டும் எனும் கருத்துடன் அன்பினால் கூறியவையே. அதனால்தான் அன்னை தீயில் பாய்ந்தபோதும், அவள் உடலில் உண்டான வியர்வைத் துளிகள்கூட தீயின் வெப்பத்தால் உலரவில்லை; அவள் கூந்தலில் சூடின மலர்களும்கூட துளிக்கின்ற தேனோடும் நீரில் படிந்தவை போல குளிர்ந்தே கணப்பட்டது.

சூழ்ந்து நின்றவர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். "சீதையின் கற்பு எனும் வலிய தீ என் வலிமையை எரித்து அழித்து விட்டது, உனக்கு எந்தத் தீங்கும் நினையாத என்னை ஏன் வெகுண்டாய்" என்று அக்னிதேவன் இராமனிடம் முறையிடுகிறான்.

அதற்கு இராமன் அக்னி தேவனை "நீ யார்?" என்கிறான். "இவளை தீ சுடாதபடி யார் சொல்லி நீ காப்பாற்றினாய்?" என்கிறான் இராமபிரான்.

"ஐயனே! இராமா! நாந்தான் அக்னிதேவன். இந்த தேவியின் கற்புத்தீ என்னைச் சுட்டெரித்து விட்டது. எனவே உன்னைச் சரணடைந்தேன். உலகத்தின் நாயகனே! இங்கே என் நிலையை நேரில் கண்ட பிறகும், இந்தத் தெய்வத்தின் கற்பில் ஐயம் கொண்டனையோ? இவள் மட்டும் சீற்றம் கொள்வாராயின், மேகம் மழை பொழியுமோ? பூமி பிளந்து சிதறாமல் போகுமோ? அறமும் செவ்விய நெறியில் நடக்க முடியுமோ? உலகம் அழியாமல் இருக்குமோ? இவள் வெகுண்டு சபித்தால், பிரமனும்கூட இறந்தொழிவான்" இவ்வாறு சொல்லிக் கொண்டு அக்னிதேவன் பிராட்டியை இராமன் முன்பாகக் கொண்டுவர, இராமன் அன்னையை ஏற்றுக் கொள்கிறான்.

இராமபிரான் அக்னிதேவனிடம், "அழிவு இல்லாதவன் நீ! சீதையை இகழ்ந்து ஒதுக்குவதற்கு யாதொரு குற்றமும் இல்லாதவள் என்று மெய்ம்மையான மொழியைக் கூறினாய். அதனால் உலகம் இகழ்ந்து ஒதுக்க யாதொரு பழியும் இல்லை. இனி இவள் நீக்கத்தக்கவள் அல்ல என்று ஏற்றுக் கொண்டேன்" என்றான்.

தேவர்கள் வேண்டிக் கொள்ள, பிரம்ம தேவன், இராமபிரானிடம், அவன் யார் என்பதைக் கூறுகிறான். இராமபிரானே திருமாலின் அவதாரம் என்றும், அவதார காரனங்களையும், விளைவுகளையும் பிரமதேவனும், பரமேஸ்வரனும் விளக்கிக் கூறுகிறார்கள். பிறகு சிவபெருமான் வைகுந்தப் பதவி பெற்றுவிட்ட தசரதன் இருக்குமிடம் சென்று, அங்கு போய், அவனுடைய மகன் இராமன் பிரிவினால் தசரதன் அடைந்த துயரத்தை, இராமனைச் சந்தித்துப் போக்கிக் கொள்ளுமாறு கூறுகிறார். சிவபெருமான் கட்டளைப்படி, தசரதன், தன் மகனைக் காண நிலமிசை வந்து சேர, இராமன் அவன் திருவடிகளில் வணங்கி ஆசி பெற்றான். தசரதன் காலில் வீழ்ந்து வணங்கிய சீதையையும் தசரதன் வாழ்த்தி ஆசி கூறினான். இலக்குவனை அருகில் அழைத்து, அவனைத் தழுவிக் கொண்டு அவனைப் பாராட்டுகிறான். அப்போது, இராமன் தசரதனிடம் ஒரு வரம் கேட்கிறான், அது:-

"ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று உரை என, அழகன்
தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும், மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக எனத் தாழ்ந்தான்
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிரெலாம் வழுத்தி!".

"இராமா! நீ கேட்டுக் கொண்டபடியே, பரதன் என் மகனாக ஆகட்டும், அவனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பாவி கைகேயி மீது நான் கொண்ட கோபம் தீராது" என்றான்.

அது கேட்ட இராமன், "நான் சுமக்கவிருந்த பெருஞ்சுமையான அரச பதவியை நீக்கிப் புண்ணியத் துறைகள் ஆடி, தீயோரை ஒறுத்து, நல்லோரைக் காக்கும் இவ்வாய்ப்பினை அருளிய எம் அன்னையின் செயல் எங்ஙனம் குற்றமுடையது? குற்றமுடையது அல்ல!" என்றான். மெய்ம்மையை உணர்ந்த தசரதன், தான் கைகேயியின் பால் கொண்ட வெகுளியை விட்டு ஒழித்தான்.

இப்படி இராமனுக்கு வரம் அளித்துவிட்டு, தசரதன் விமான்மேறி வைகுந்தம் போய்ச்சேர்கிறான். தேவர்கள் வந்து இராமனைச் சூழ்ந்து கொண்டு, "இராமா! நீ வேண்டுகின்ற வரத்தைக் கேள்!" என்றனர்.

இராமன் உடனே தேவர்களிடம், "போரில் மாண்டுபோன வானரர்கள் அனைவரும் உயிர் பெற்று எழுமாறும், இவர்கள் செல்லுகின்ற காடு, வனம் முதலான இடங்களில், இவர்களுக்குக் கணக்கற்ற வகைகளில் காய்களும், கனிகளும் கிடைக்குமாறும், அருள் புரிக!" என்று வேண்டினான். அங்ஙனமே தேவர்கள் அருள் புரிந்தனர்.

அப்போது தேவர்கள் இராமனிடம், "இன்றோடு பதினான்கு ஆண்டுகள் முடிந்து போய்விட்டன. நீ பரதனிடம் வாக்களித்தபடி இன்றே போய்ச் சேருவாயாக. அப்படி இல்லையேல், அவன் செய்திருக்கும் சபதப்படி, தீயினுள் பாய்ந்து விடுவான்" என்றனர்.

"இன்றே நான் அயோத்தி செல்ல யாதேனும் மார்க்கம் உண்டோ?" என்று வினவினான். அதற்கு விபீஷணன் இராமனை வணங்கி, "ஐயனே! இன்றே விரைந்து சென்று சேரும்படியான விமானம் இங்கே இருக்கிறது. வள்ளலே! இந்த விமானத்தை குபேரனிடமிருந்து இராவணன் கவர்ந்து கொண்டான். இந்த விமானம் எழுபது வெள்ளம் பெரும் சேனை ஏறி அமர்ந்தாலும் தளராது பறந்து செல்லக் கூடியது, நீ இதில் ஏறி உட்கார்ந்து இன்றே அயோத்தி போய்ச் சேர்ந்துவிடலாம்" என்றான்.

விபீஷணன் குறிப்பிட்ட அந்த குபேரனுடைய புஷ்பக விமானம் வந்து சேர்ந்தது. விமானத்தில் இராமனுடன், சீதையும், இலக்குவனும் அமர்ந்து கொள்கிறார்கள். இராமன் விபீஷணனிடம், "விபீஷணா! உன்னைச் சார்ந்தவர்களுக்கு இனிய செயல்களனைத்தையும் செய்துவிட்டு, யாவரும் பாராட்டி புகழும்படி நல்லாட்சி புரிவாயாக!" என்று ஆசி வழங்கினான்.

அடுத்து சுக்ரீவனை நோக்கி, "சுக்ரீவா! உன் தோள் வலிமையால் இராவணனைக் கொன்றேன். நீயும் உன் படைகளும், கிஷ்கிந்தை சென்று ஓய்வு கொண்டு, எல்லா நலன்களையும் பெற்று சுகமாக வாழ்வீர்களாக!" என்று வாழ்த்தினான்.

பிறகு அங்கதன், ஜாம்பவான், பனசன், நீலன் ஆகியவர்களை அழைத்து, அனுமனையும் தன் பக்கம் வரச் சொல்லி "நீங்கள் அனைவரும் சுகமாக வாழ்வீர்களாக!" என்று கூறுகிறான். அவர்கள் இராமனைப் பிரிய மனமின்றி இராமபிரானுடைய முடிசூட்டு விழாவைக் காண உடன் வருவதாகக் கூறினார்கள். உடனே இராமன் அதற்கு இசைவு தெரிவிக்க அனைவரும் மகிழ்ந்து அவனோடு புறப்படத் தயாராகினர். அனைவரும் புஷ்பக விமானத்தில் ஏறிக் கொள்கிறார்கள். இராமன் கட்டளைப்படி அனைவரும் மானுட வடிவம் எடுத்துக் கொள்கின்றனர்.

விமானம் வடக்கு திசை நோக்கி பறக்கிறது. வழியில் தென்படும் காட்சிகளை, இராமன் சீதைக்குக் காட்டிக் கொண்டு வருகிறான். அதோ பார்! கடலை அடைத்துக் கட்டிய சேது. இது மகா புண்ணிய க்ஷேத்திரம். இங்கு வந்து தீர்த்தங்களில் மூழ்கிச் செல்பவர்கள் அனைத்துப் பாவங்களும் நீங்கி நற்கதி அடைவர்.

"கங்கையொடு, யமுனை, கோதாவரியொடு களிந்தை சூழ்ந்த
பொங்கு நீர் நதிகள் யாவும், படிந்து அலால், புன்மை போகா;
சங்கு எறி தரங்க வேலை தட்ட இச் சேது என்னும்
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே!"

இந்த சேதுவில் நீராடியவர்கள், அவர்கள் எத்தகைய பாவங்களைச் செய்தவரேனும், பசுக்களை, ஐம்பெரும் குரவர் எனப்படும், ஆசிரியர், அரசன், தாய், தந்தை, தமையன், முனிவர்கள், பெண்டிர், குழந்தைகள், அடைக்கலமாக வந்தவர்கள் ஆகியோரைக் கொன்ற கொடிய பாவமும் கூட இந்த சேதுவின் பாந்த கடலிடை மூழ்கினால் தேவர் தொழும் பெருமை பெற்றவர் ஆவார்.

கடலின் குறுக்கே அடைத்து சேது அணையைக் கட்டியதால் மரக்கலங்கள் நீரில் தடையின்றி செல்வமுடியாமல் போய்விடும் என்பதால், அந்த வழியாக மரக்கலங்கள் தடையின்றி செல்ல வேண்டித் தனது வில்லின் நுனியினால் சேது அணையைக் கீறி உடைத்து வழி செய்தார். அந்த இடமே துனுஷ்கோடி எனப்படும்.

வருணன் தன்னிடம் சரண் அடைந்த இடத்தை அனைவருக்கும் காட்டுகிறான் இராமன். பொதிகை மலை, திருமாலிருஞ்சோலைமலை, திருவேங்கடமலை ஆகிய இடங்களையும் புஷ்பக விமானத்திலிருந்து பார்க்கும்படி மற்ரவர்களுக்குக் காட்டுகிறார். சுக்ரீவனது நகரத்தைக் காட்டுகிறார். வானர மகளிரையும் நம்முடன் அழைத்துச் செல்லலாம் என்று சொல்லுகிறாள் சீதை. அவர்களும் அங்கு விமானத்தில் ஏறி மற்ரவர்களுடன் சேர்ந்து கொள்ளுகிறார்கள்.

வழியில் கோதாவரி நதியையும், சீதையைப் பிரிந்த இடத்தையும், தண்டகவனம், சித்ரகூட பர்வதம், பரத்துவாஜர் ஆசிரமம் இவற்றையெல்லாம் பார்க்கிறார்கள். பரத்வாஜ முனிவர் இருக்குமிடம் சென்று அவரை வணங்குகின்றனர். முனிவர் இராமனைத் தழுவிக் கொண்டு ஆசீர்வதிக்கிறார். எல்லோருக்கும் இராமனது பெருமையை எடுத்துரைக்கிறார். பரத்துவாஜர் இராமனிடம், உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் என்று சொல்லவும், இராமன் வானரங்கள் செல்லும் இடங்களெல்லாம் வளம் பெற்று செழிப்பாக இருக்கும்படியான வரத்தினைக் கேட்டுப் பெற்றான்.

இராமன் அனுமனை அழைத்து, நீ முன்னால் போய் நந்திகிராமம் சென்று பரதனிடம் நான் வரும் செய்தியை முன்னதாகச் சொல், இல்லையேல் அவன் நான் வாக்கு தவறிவிட்டதாக நினைத்து தீயில் இறங்கிவிடுவான் என்கிறான். அனுமனும் உடனே நந்திகிராமம் விரைகிறான்.

அங்கே, நந்தியம்பதியில் பரதன், இராமனை நினைத்துத் தவ வாழ்க்கை வாழ்கிறான். இராமன் என்று வருவான் என்று காத்திருக்க, சோதிடர்கள் இராமன் வரவேண்டிய நாள் இன்றுதான் என்கிறார்கள். குறித்த நாளில் இராமன் ஏன் வரவில்லை என்று பரதன் வருந்துகிறான். இராமன் வரானாயின், நான் தீப்புகுந்து உயிர் துறப்பேன் என்று சத்ருக்குனனை அழைத்து, தீயை மூட்டும்படி கேட்டுக் கொள்கிறான். சத்ருக்குனன் வருந்தி அண்ணனுக்கு ஆறுதல் கூறுகிறான். இந்த செய்தியறிந்து கோசலை, பரதனை தடுக்க முயல்கிறாள். பரதன் மறுத்து, சொன்ன வாக்குப்படி அண்ணன் இன்று வரானாயின் நான் தீப்புகுந்து இறப்பது உறுதி என்கிறான்.

தீ மூட்டப்படுகிறது. பரதன் தீயை வலம் வந்து, பூசனைகள் செய்து முடிக்கும் சமயத்தில், குன்று போல நெடும் மாருதி வந்து சேர்ந்தான்.

"ஐயன் வந்தனன், ஆரியன் வந்தனன்
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால்
உய்யுமோ அவன்? என்று உரைத்து உள்புகா
கய்யினால் எரியைக் கரி ஆக்கினான்".

அனுமன் அங்கே பரதன் வளர்த்த தீயைத் தன் கையினால் அவித்தான். பரதனிடம் இராமனின் மோதிரத்தை அடையாளமாகக் காட்டிட, அதனைக் கண்டு பரதன் மகிழ்ச்சியடைகிறான். பரதன் அனுமனைப் பார்த்து, "நீ யார்?" என்கிறான். அனுமன் தன் வரலாற்றைக் கூறுகிறான். பரதனுக்குத் தன் விஸ்வரூபத்தைக் காட்ட அனைவரும் அதைக் கண்டு அச்சமடைந்தனர். அவன் தன் பெருவடிவைச் சுருக்கிக் கொண்டு அவர்களுடைய பயத்தைப் போக்கினான். அனுமனுக்கு பரதன் பல பரிசுகளைக் கொடுக்கிறான்.

இராமபிரான் திரும்பி வந்து கொண்டிருக்கிறார். அயோத்தி நகரை அழகு படுத்தி வையுங்கள் என்று மக்களுக்கு சத்ருக்குனன் மூலம் பரதன் சொல்லி அனுப்புகிறான். சத்ருக்குனன் சுமந்திரனிடம் சொல்ல, சுமந்திரன் வள்ளுவர்க்குச் சொல்லி முரசறைவிக்கிறான். முரசொலி கேட்ட நகர மாந்தர் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர்.

அறுபதினாயிரம் அக்ரோணி சேனைகளும், மக்களும் மகிழ்வோடு அயோத்தி நோக்கிச் செல்கிறார்கள். தாய்மார் மூவரும் சிவிகையிலும் பரதன், அனுமன் கையைப் பிடித்துக் கொண்டும் செல்கிறான். பரதன் இராமனது பாதுகையைத் தன் தலைமீது தாங்கிக் கொண்டு செல்கிறான். காட்டில் இராமனுக்கு நேர்ந்தவற்றையெல்லாம், பரதன் அனுமனிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறான்.

இராமன் அயோத்தி நோக்கி வந்து கொண்டிருக்கும் மார்க்கத்தில் பரத்துவாஜ முனிவரை சந்தித்து வணங்கி ஆசிபெற்று, தன் பயனத்தைத் தொடர்ந்து வரும் வழியில், கங்கைக் கரையில் வேட்டுவர் குல மன்னன் குகனைக் கண்டு அவனது நலனை விசாரிக்கிறான். பிறகு விமானம் அயோத்தியைச் சென்றடைகிறது. அனுமன் பரதனிடம் சொல்லுகிறான்:-

"அண்ணலே! காண்டியால் அலர்ந்த தாமரைக்
கண்ணனும், வானரக் கடலும், கற்புடைப்
பெண் அருங்கலமும், நின் பின்பு தோன்றிய
வண்ணவில் குமரனும், வருகின்றார்களை"

பதினான்கு வருஷங்களுக்கு முன்பு பிரிந்து போனவர்கள் அனைவரும் ஒன்று சேர்கின்றனர். வசிஷ்டரை இராமன் வணங்குகிறான். பரதனை இராமன் தழுவிக்கொண்டு கண்ணீர் விடுகிறான். முதலில் நந்தியம்பதியை அடைந்து இராமன் தன் தவக்கோலத்தை நீக்கிக் கொண்டு, நீரில் மூழ்கிய பின் ஒப்பனைகள் செய்து, மக்கள் ஆரவாரம் செய்ய, அயோத்தி நகர் சென்றடைந்தான். சீதாதேவியும் வானரப் பெண்கள் புடைசூழ விமானத்தில் வந்து சேருகிறாள். அயோத்தி நகரமே ஆரவாரம் செய்து மகிழ்கிறது.

சுக்ரீவன் பரதனை நோக்கி, "முடிசூட்டு விழா ஏற்பாடுகள் ஏன் தாமதமாகிறது?" என்கிறான். அதற்கு பரதன் முடிசூட்டு விழாவிற்காக நாடு முழுவதிலிருந்தும் புனித தீர்த்தம் வந்து கொண்டிருக்கிறது, அதனால் தாமதம் ஆகிறது என்கிறான். உடனே சுக்ரீவன் அனுமனை குறிப்பால் நோக்க, அவன் உடனே புறப்பட்டுப் போய் புனித தீர்த்தங்களைக் கொண்டு வர புறப்பட்டான்.

வசிஷ்டர் முடிசூட்டு விழாவிற்கு நாள் குறிக்க, யாவர்க்கும் செய்தி அனுப்பப்படுகிறது. முடிசூட்டு விழாவுக்காக மயன் ஓர் அருமையான மண்டபம் ஒன்றை அமைக்கிறான். அனுமனும் விரைவாக புனித தீர்த்தங்களுடன் வந்து சேருகிறான். பொற்குடங்களில் சரயு நதி தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

"மாணிக்க பலகை தைத்து வயிரத்தின் கால்கள் சேர்த்தி
ஆணிப் பொன் சுற்றும் முற்றி, அழகுறச் சமைத்த பீடம்
ஏணுற்ற பளிக்கு மாடத்து இட்டனர்; அதனின் மீது
சேணுற்ற திரள் தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ!".

அப்படி அந்த மாணிக்கப் பலகையில் வந்து உட்கார்ந்த இராமனுக்கும், சீதாபிராட்டிக்கும் புனித தீர்த்தங்களால் நீராட்டு முடிந்தபின், அரசவை கூடியிருக்க, அமைச்சர் பிரதானிகள் அரசர்கள் பொது மக்கள் விருந்தினர்கள் அனைவரும் காத்திருக்க, குறித்த முகூர்த்த நேரம் நெருங்கிய சமயம் ஸ்ரீ இராம பட்டாபிஷேகம் நடைபெற்றது.

"அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி வீச
விரை செறி குழலி ஓங்க, வெண்ணையூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மெளலி."

அரியணையை அனுமன் ஏன் தாங்க வேண்டும்? ஓர் அரசனுக்கு இருக்க வேண்டிய ஆற்றல் பற்றி திருக்குறள் இறைமாட்சி அதிகாரத்தில் குறிப்பிடப்படும், அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடமை இத்தனையும் ஒருங்கே அமையப்பெற்ற அனுமன், இராமபிரானுடைய "இராம ராஜ்ய" ஆட்சிக்கு அச்சாணியாக இருக்கப் போகிறான் என்பதையே, அனுமன் அரியணையைத் தாங்குவதின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

வாலி இறக்கும் தருவாயில் அங்கதனை இராமபிரான் கையில் ஒப்படைத்து விட்டு, இவன் இனி உன் அடைக்கலம் என்கிறான் அப்போது இராமன் தன் உடைவாளை அந்த அங்கதனிடம் கொடுக்கிறான்; இராமன் முடி சூட்டும்போதும், பரதனோடு அங்கதனையும் இளவரசாக ஏற்றுக் கொண்ட அறிகுறியே அவன் உடைவாளை தாங்கும் காட்சி.

இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் இருந்தபோது, நாட்டை இராமனின் பெயரால் "ராமராஜ்யமாக" நடத்தி வந்தவன் பரதன். இப்போது அந்த ராமராஜ்யத்தின் வெண்கொற்ற குடை தரப்போகும் நல்லாட்சியை பரதனைவிட வேறு யாரால் தர முடியும், ஆகையால் அவன் இராமனுக்கு வெண்கொற்ற குடை பிடிக்கிறான்.

இலக்குவனும், சத்ருக்குனனும், தன் அண்ணன்மார்களுக்குச் சேவை செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் என்பதால் அவர்கள் கவரி வீசுகிறார்கள்.

திருவெண்ணைநல்லூர் சடையப்ப வள்ளல் போன்ற உணவளிக்கும் வள்ளல் பரம்பரையினரின் கையால் எடுத்துக் கொடுத்த மணிமுடியை குலகுருவான வசிஷ்டர் இராமன் முடியில் வைத்து ஆசீர்வதிக்க, இராம பட்டாபிஷேகம் இனிதே நடக்கிறது.

"வாழி ஜானகி, வாழி இராகவன்
வாழி நான்மறை, வாழிய அந்தணர்,
வாழி மாமறை யென்றென்று வாழ்த்தினான்
வாழி தோறும் உயர்ந்துயர் கீர்த்தியான்"

-சுபம்-
கம்பர் பெருமான்

(கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமான் இயற்றிய "இராம காதை" நிறைவு பெற்றது)

உரைநடை வடிவம்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,

10 comments:

  1. மிக அருமையான முயற்சி. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.மன்னிக்கவும் வாழ்த்த வயதின்றி வணங்குகிறேன்.
    நான் முதன்முதலில் படிக்கும் ராமாயண விளக்கம் இது.
    பாபு.கும்பகோணம்.கத்தார்.

    ReplyDelete
  2. சதீஷ், உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. கம்பனை எத்தனை முறை படித்தாலும் திகட்டாது. கானாடுகாத்தான் சோ.முருகப்பா போன்ற சில அறிஞர் பெருமக்கள் கம்பனை விமரிசனம் செய்வதற்காகப் படிக்கப்போய், அவன் கவிதைகளுக்கு அடிமைகளாக ஆகியிருக்கின்றனர். இடைக்கால இலக்கியத்தில் கம்பனின் கொடை மிக முக்கியமானது. படிக்கப் படிக்க இன்பம் தரும். ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கம்பன் கவனமாகக் கையாண்டிருப்பதைப் பார்க்கலாம். மீண்டும் நன்றி.

    ReplyDelete
  3. அனுமனைப் பார்த்து இந்திரஜித் சொல்கிறான் என்பதாக இருக்க...
    ஐயா, தட்டச்சின் போது பிழை சரி செய்யுங்கள்
    நன்றி.

    "தன் மகன் அதிகாயன் மாண்ட செய்தி கேட்டு தான்யமாலினி, தன் கணவன் இராவணன் கால்களில் விழுந்து அலறி அழுதாள். அரக்கப் பெண்கள் மட்டுமல்லாமல், ஊர்வசி, மேனகை போன்ற தேவலோகப் பெண்களும் வாய்விட்டு அழுது வருந்தினார்கள். தான்யமாலினியைத் தேற்றி அழைத்துச் சென்றனர்."

    ஐயா! ஊர்வசியும், மேனகையும் அழுதது, தேவலோகப் பெண்கள் என்ற போதிலும் இவர்கள் அழுதார்கள் என்றால் அது தான்யமாலினியின் மேல் அவர்கள் கொண்டிருந்த, அன்பையும் மதிப்பையும் தான் காட்டுகிறது. ஆக இந்த ராம காதையில் தான்யமாலினியின் சிறப்பை கூறும்படியாக கம்பன் வேறு இடங்களில் நிறுவி இருப்பான்! அதை அறிய ஆவலாக உள்ளது. கிடைக்குமா? இல்லை இந்த இடத்தில் மாத்திரமே நாம் ஊர்வசியின், மேனகையின் அழுகையின் மூலமே அவைகளை அறிந்து கொள்ளவேண்டியதா? நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  4. ஆமாம்! உண்மை, தம்பிகளின் இழப்புகளில் இருந்து இந்திரஜித்தும் காரணத்தைப் புரிந்து கொண்டான், உன்னுடைய காமவெறியே! இந்த அவலத்திற்கு காரணம் என்பதை தனது தந்தையிடம் நேரடியாக கூறமுடியாது மறைமுகமாகவே கூறிவிட்டான்-
    "அவர்களா கொன்றார்கள்? அவர்களைக் கொல்லும்படி நீயே அல்லவா அனுப்பி வைத்தாய்? (கொன்றார் அவரோ? கொலை சூழ்க என நீ கொடுத்தாய்) அப்படியோரு வாய்ப்பை நீ அல்லவா கொடுத்தாய்? மாற்றான் மனைவியின் மீது நீ காமம் கொள்ளாமல் இருந்திருந்தால் அவர்கள் என் கொள்ளப்போகிறார்கள் என்று.. சொல்லாமல் சொல்லிவிட்டான், பெரியோரின் பிழையையும், நேரிடையாக அல்லாமல் நெளிவு சுளிவோடு கூறும் கம்பனின் பங்கு மிகவும் நன்று... இந்த புரிதல் அவன் இறப்பதற்கு தயாராகிவிட்டான் என்பதை கம்பன் இங்கேயே மறைமுகமாக கூறிவிட்டான்.

    ReplyDelete
  5. "சூழ்ந்து நின்றவர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள்"

    இதற்காகவே ஸ்ரீ இராமன் இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறான்.

    "பிராட்டி இராமபிரானது திருமேனியைக் கண்டு தரிசிக்கிறாள். விமானத்திலிருந்து இறங்கி இராமனைத் தொழுதுவிட்டு, தன் ஏக்கம் நீங்கினாள். இராமபிரானும், கற்புக்கரசியும், பெண்மை குணங்களுக்கு இருப்பிடமானவளும், அழகுக்கு அழகானவளும், தன்னைப் பிரிந்த நிலையிலும் அருள் செய்யும் அறத்தை உடையவளுமான பிராட்டியை அன்பினால் உளம் பொருந்த நோக்கினான்."

    கண்கள் கண்ணீர் சோர, தன் காலடியில் விழுந்து வணங்கிய சீதையை அடுத்த கணம் அவளைப் பார்த்த பார்வையில், கருணை மறைந்து சீற்றம் தென்பட்டது. அந்தச் சீற்றம் கண்களில் மின்ன, இராமன் பேசுகிறான்.

    இந்த மன மாற்றம் ஏன்?. அதுதான் ஊருக்காக. இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து இருந்தும் வேறொருவன் இடத்தில் பத்து திங்கள் இருந்து வந்த பெண்மகளை இந்த சமுதாயம் எதோ ஒரு தருணத்தில் உள்மனதில் கூட தவறாக எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவே இது நடந்திருக்கிறது. இது அன்னை சீதையை இன்னும் சந்தொசமடையாச் செய்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இது அன்னைக்கு கிடைத்த ஒரு வாய்ப்பே! அவளின் கற்பை அவள் அறிவாள் என்பதைவிட அவள் தான் அதை முன்பே அனுமனின் வாலில் மூட்டிய தீ குளிர்ந்ததும் அதனால் தானே! ஆக அதை அன்னை முன்பே உணர்ந்தவள் தானே! ஆகவே இது சமுதாயத்திற்காக நடந்ததே! அதுவும் உண்மை என்பதை கம்பன் கூறிவிட்டான்
    எப்படி?
    "சூழ்ந்து நின்றவர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள்" என்று...
    ஏன் இந்த ஆனந்த கூத்து? சந்தேகம் இருந்ததாலே! (தேவர்களும் ஆனந்தம் அடைந்தார்கள் என்றால் அவர்களின் சந்தேகத்தையும் அன்னை துடைத்தொழித்தால் என்பதே!)

    மிகவும் அற்புதப் பணி இது. ஐயா! உங்களின் இந்த சீரிய பணிக்கு எனது சிரம் தாழ்ந்த ஆயிரமாயிர வணக்கங்கள்!
    நன்றிகள்!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.
    சிங்கப்பூர்.

    ReplyDelete
  6. ஐயா!
    கடைசியாக கம்பனின் நன்றிமறவா குணத்தை அந்த உயரிய கர்ண குணத்தை, பண்பை படைப்பின் இறுதியில் முத்தாய்ப்பாய் வாய்த்த பாங்கை இங்கும் மீண்டும் நினைவு கூர்ந்து மெய்சிலிர்க்கிறேன்!
    "வெண்ணையூர்ச் சடையன் தங்கள்
    மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மெளலி"

    இவன் இந்த கம்பன் பிறந்ததாலே வான்புகழ் கொண்டது தமிழ்நாடு என்றான் நிவேதிதா தாசன். முக்காலும் உண்மை. அந்நாட்டிலே பிறந்தமையால் அதில் எனக்கும் பெருமை.
    நன்றி.

    ReplyDelete
  7. அருமை நண்பர் ஆலாசியம் அவர்களுக்கு, கம்பநாட்டாரின் காப்பியச் சுவையை எந்த அளவுக்குத் தாங்கள் அள்ளிப் பருகியிருக்கிறீர்கள் என்பதை அறிய மனம் எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்கிறது. என் முயற்சி தங்களைப் போன்ற 'நல்ல' ரசிக உள்ளங்கொண்டவர்களுக்கு நிறைவு அளிக்கிறது என்றால் அதுவே என் பாக்கியம் என கருதுகிறேன். அனுமன் இந்திரஜித் சம்பந்தப்பட்ட இடத்தில் ஏற்பட்ட பிழையைக் களைந்துவிட்டேன். குறிப்பிட்டமைக்கு நன்றி. தான்யமாலினி குறித்து கம்பன் வேறு எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை, இந்த இடத்தில் மட்டும்தான் குறிப்பிடுகிறான். பல செய்திகளை இலை மறைவு காய் மறைவாகச் சொல்லிச் சென்றிருக்கிறான். அவனது கதை சொல்லும் பாணியை வேறு எவரும் மிஞ்சிவிடவில்லை என்பது எனது கருத்து. பால காண்டத்தில் சொல்லும் ஒரு செய்தியின் தொடர்ச்சியை யுத்த காண்டத்தில் நினைவு படுத்தும் ஆற்றல் கம்பனிடம் இருந்தது. நமது பாரதத் திருநாட்டின் ஒப்பிலாத ஒரு காப்பியத்தை மீண்டும் நினைவுகூர சந்தர்ப்பம் கிடைத்தமைக்கும், தங்களைப் போன்ற ஆழ்ந்த புலமையும், ரசிகத் தன்மையும் கொண்ட நல்லோர்களின் தொடர்பு அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். மீண்டும் நன்றி.

    ReplyDelete
  8. அதிகாயன் மாண்டது கண்டு தான்யமாலினி கதறி அழுதாள். தேவமாதரும் அழுதனர். ஏன் அவர்கள் அழ வேண்டும்? இராவணன் தான் பெற்ற அதீத வரங்களினால், தேவர்களை வென்றான், இந்திரன், அக்னி, வாயு, வருணன் போன்றவர்களைத் தனக்குப் பணியாளர்களாக அமர்த்திக் கொண்டான். தேவகுலப் பெண்களைத் தன் அந்தப்புரத்தில் பணிக்கு அமர்த்தினான். அந்த வகையில் பல காலம் அரக்கிகளுக்குத் தாதியராக இருந்த தேவகுல மாதர், அந்த அரக்கியரின் மகனும் ராஜகுமாரனுமான அதிகாயன் இறந்ததும், அவனது தாய் அழுவது கண்டு தானும் அழுகின்றனர். வெகுகாலம் ஓரிடத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் எஜமானர் வீட்டில் ஒரு துயரம் நிகழும்போது, வேலைக்காரர்களும் அழுவது உண்டு. அந்த வகையில் அழுதனர் என்பதே விளக்கம்.

    ReplyDelete
  9. நன்றி ஐயா .உங்களின் அற்புதப் பணி தொடரட்டும்

    ReplyDelete
  10. நன்றி ஐயா .உங்களின் அற்புதப் பணி தொடரட்டும்

    ReplyDelete

Please give your comments here